புகையிரத சேவையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்துங்கள் : ஜனாதிபதிக்கு புகையிரத நிலைய அதிபர் சங்கம் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 21, 2021

புகையிரத சேவையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்துங்கள் : ஜனாதிபதிக்கு புகையிரத நிலைய அதிபர் சங்கம் கடிதம்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அனைத்து துறைகளின் சேவைகளும் மட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பயணிகள் புகையிரத பொதுப் போக்கு வரத்து சேவையினை ஆரம்பிக்காமல் தொடர்ந்து பிற்போடப்பட்டுள்ளமையினால் சாதாரன பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். அத்தியாவசிய சேவைக்காகவும், பாடசாலை சேவைக்காகவும் பயணிகள் புகையிரத சேவையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரச மற்றும் தனியார் துறைகளினது சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்து சேவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளும் கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ளன. 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் புகையிரத சேவையை ஆரம்பிக்காமல் தொடர்ந்து பிற்போட்டுள்ளதால் அரச மற்றும் தனியார் துறையினரும், நாட்கூலி பெறுபவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

கொவிட் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புகையிரத சேவை இல்லாத காரணத்தினால் பிரதான வீதிகளில் உள்ள வாகன நெரிசல் காரணமாக பேருந்து போக்கு வரத்து சேவையினை பயன்படுத்தாமல் பிரத்தியேக வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்த தொழிற்சங்கம் என்ற ரீதியில் இவற்றை அவதானித்துள்ளோம்.

புகையிரத போக்கு வரத்து சேவை இல்லாத காரணத்தினால் சாதாரண பயணிகள் போக்கு வரத்திற்காக வழமைக்கு மாறாக அதிக பணத்தை செலவிடுகிறார்கள்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் புகையிரதங்களில் பயணம் செய்கிறார்கள். தற்போது பாடசாலை ஆரம்பமாகியுள்ள நிலையிலும் புகையிரத சேவை இல்லாமலிருப்பது கேள்விக்குறியான தன்மையை ஏற்படுத்தியுள்ளது

புகையிரத சேவையை தவிர்த்து வேறெந்த போக்கு வரத்து சேவையும் இல்லாத பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் புகையிரத சேவையை தொடர்ந்து ஆரம்பிக்காமல் இருப்பது சாதாரண மக்களுக்கு இழைக்கும் அநீதியான செயற்பாடு என்று கருதுகிறோம்.

புகையிரத சேவை தவிர்ந்த ஏனைய பொது போக்கு வரத்து சேவைகளை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த பொது போக்கு வரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக பின்பற்றப்படுகின்றதா,என்பது சந்தேகத்திற்குரியது.

இருப்பினும் பயணிகள் புகையிரத போக்கு வரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சிறந்த முறையில் முன்னெடுக்க உரிய வழிமுறைகள் காணப்படுகின்றன. அதற்கான முழு ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குவோம்.

அத்தியாவசிய சேவைக்காகவும்,பாடசாலை சேவைக்காகவும் புகையிரத சேவையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க அவதானம் செலுத்துமாறு புகையிரத சேவையினை பயன்படுத்தும் சாதாரண பயணிகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment