ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் : தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கருக்கலைப்பு, கருத்தடை மாத்திரை கலந்த கொத்து அனைத்தும் பொய் - தலதா அதுகோரல - News View

Breaking

Monday, October 4, 2021

ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் : தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கருக்கலைப்பு, கருத்தடை மாத்திரை கலந்த கொத்து அனைத்தும் பொய் - தலதா அதுகோரல

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் கனிய எண்ணெய் கூட்டுத்தாபன சட்டத்தை திருத்தி கூட்டுத்தாபனத்தை பல பகுதிகளாக பிரித்து சீன நிறுவனத்திற்கும், இந்தியாவின் பாரத் பெற்றோலியம் நிறுவனத்திற்கும் வழங்க கவனம் செலுத்தியுள்ளது. 1960 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் எதிர்வரும் வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் ராஜபக்ஷர்கள் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளனர். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், போலியான வாக்குறுதியை வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களை முழுமையாக ஏமாற்றியுள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் தேசிய பாதுகாப்பு, அனைத்து நாடுகளுடன் நட்புறவான வெளிநாட்டு கொள்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

ஆயுத மேந்திய இராணுவத்தினர் வீதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தி நாம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி விட்டோம் என்று அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. தேசிய பாதுகாப்புக்குள் உள்ளடங்கும் விடயதானங்கள் குறித்து முதலில் ஜனாதிபதி உட்பட அவர் தலைமையிலான அரசாங்கம் தெளிவுபெற வேண்டும். சுகாதாரம், மக்களின் வாழ்வாதாரம், உள்ளிட்ட பல விடயங்கள் தேசிய பாதுகாப்பிற்குள் உள்ளடங்குகின்றன.

கொவிட்-19 வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் வேளையில் அரசாங்கம் தமக்கு சாதகமான, நாட்டுக்கு பாதகமான விடயங்களை நிறைவேற்றிக் கொள்கிறது.

கொவிட்-19 வைரஸ் தீவிரடையும் போது நாட்டை முடக்காமல் மக்களை பலி கொடுத்த அரசாங்கம் நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் போது மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம்,கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் நிறைவேற்றம், யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை,ஆகியவை கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் நடுத்தர மக்கள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அரிசி, பால்மா, சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலையை வியாபாரிகள் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

நாட்டில் எந்நிலையிலும் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்தை தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனுடாக இவர்கள் மக்கள் மத்தியில் எவ்வகையான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை நன்கு யூகிக்க முடிகிறது.

2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கருக்கலைப்பு, கருத்தடை மாத்திரை கலந்து கொத்து என பல விடயங்களை தேர்தல் பிரசாரம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு சில மதகுருமார்கள் ஊடாக தற்போதைய அரசாங்கம் பிரசாரம் செய்தது. இவ்விடயங்கள் அனைத்தும் தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இனவாதத்தை தோற்று விக்கும் கருத்துக்கள் பேசப்படுகிறது. குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஒரு சாதாரண நபர் கருத்துரைத்திருந்தால் அவர் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டிருப்பார். ஆனால் நாட்டில் எந்நேரமும் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என்று குறிப்பிட்ட நபர் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.

அனைத்து நாடுகளுடனும் பொதுவான வெளிவிவகார கொள்கை என்று அரசாங்கம் குறிப்பிட்டுக் கொள்கிறது. அரசாங்கம் எந்நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதை என்பதை நாட்டு மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேசிய வளங்களை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் போலி வேடத்தை மக்கள் அறிச்து கொண்டுள்ளார்கள்.

யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. முதலீடுகளுக்காக நாட்டின் வழங்கள் பிற நாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இப்படி குறிப்பிடுபவர்களின் கல்வி புலமையை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.

யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதுவரையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

1960ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டத்தை திருத்தியமைக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது. இதற்கான சட்டமூலம் எதிர்வரும் வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தின் அனைத்து உரிமைகளும் அரசுடமையாக்கப்படும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திருத்தி கூட்டுத்தாபனத்தை ஐந்து பங்குகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் நிறுவனத்திற்கும், இந்தியாவின் பாரத் பெற்றோலியம் நிறுவனத்திற்கும் பங்குகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எதிர்த்து மக்கள் வீதிக்கிறங்கி போராட முடியாத நிலை தற்போது காணப்படுகிறது.

மாகாண சபை தேர்தலை வெற்றி கொள்ளும் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவோம். வடமேல் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக ரோஹித ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவர் பாடசாலை நிகழ்ச்சியொன்றிற்கு சென்ற விதம் எமது நாட்டு கலாச்சாரத்திற்கு எந்தளவிற்கு பொருத்தமாக இருந்தது என்பதை வடமேல் மாகாண மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். வடமேல் மாகாண மக்கள் அரசியல் ரீதியில் தவறான தீர்மானத்தை எடுக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment