இத்தாலியில் கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம் : 8 பேர் பலி - News View

Breaking

Sunday, October 3, 2021

இத்தாலியில் கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம் : 8 பேர் பலி

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானம் ஆளில்லாத கட்டடம் ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது.

மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. ஆனால் கிளம்பிய சற்று நேரத்திலேயே மிலன் நகரின் புறநகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விமானம் கீழே விழுந்த போது பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் அது இரண்டு அடுக்கு மாடி அலுவலக கட்டடம் மீது ஒன்றின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது என்றும் அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு சிறுவனும் அடக்கம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானம் விழுந்து நொறுங்கிய பொழுது தரையில் இருந்த யாருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரய் அரசு தொலைக்காட்சி உயிரிழந்தவர்கள் அனைவரும் பிரான்ஸ் நாட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்தத் தகவலை இத்தாலிய அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.

சான் டோனாடோ மிலானீஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் தீக்கிரையாகின என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் கட்டுமானத்தின் கீழ் உள்ள இந்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment