மாத்தளை மாவட்டத்தில் 670 வீதிகள் அமைக்க முடிவு : அரசாங்கத்தை கவிழ்க்க நினைத்தால் அது ஒரு கனவு மாத்திரமே - அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

Breaking

Monday, October 11, 2021

மாத்தளை மாவட்டத்தில் 670 வீதிகள் அமைக்க முடிவு : அரசாங்கத்தை கவிழ்க்க நினைத்தால் அது ஒரு கனவு மாத்திரமே - அமைச்சர் ஜோன்ஸ்டன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்திற்கு அமைவாக 100,000 கி.மீ நீள வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பாலபத்வல-கலேவெல (பி -346) வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் பணி ஆளும் தரப்பு பிரதம கொறடா , நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

30.75 கிலோ மீட்டர் நீள பாலபத்வல - கலேவெல (பி - 346) வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 12 மாதங்களுக்குள் ரூ. 3,552 மில்லியன் செலவில் இத்திட்டம் நிறைவு செய்யப்படும். வீதிஅபிவிருத்தி அதிகார சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த வீதி விஸ்த்தரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்த வீதி 30 கிலோ மீட்டரை விட நீளமானது. கடந்த ஐந்து வருட நல்லாட்சியின் போது இந்த நாட்டில் வீதிகள் எதுவும் அமைக்கப்படவில்லை. கடந்த அரசாங்கம் நிர்மாணிக்கப்பட்ட வீதிகளை பாதுகாக்ககூட நடவடிக்கை எடுக்கவில்லை. 

ஜனக பண்டார தென்னகோன் உட்பட மாவட்ட அரசியல் தலைமைகளுக்கு இந்த மாவட்டத்திலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன. இந்த வீதியை விரிவுபடுத்தி மேம்படுத்தும்படி என்னிடம் கோரப்பட்டது. 

இந்த வீதியை அபிவிருத்தி செய்பதற்காக நெடுஞ்சாலை அமைச்சு ரூ. 35,000 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் அபிவிருத்தி பணிகள் இடம்பெறவில்லை என பலர் குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

கடந்த அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட பொருளாதாரமே எமக்குக் கிடைத்தது. கடந்த அரசாங்கம் செய்த திருட்டுகளால் எங்கள் பொருளாதாரம் சரிந்தது. மத்திய வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. கண்டி வரை நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அது நிர்மாணிக்கப்படவில்லை. தம்புள்ளைக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. 

மாத்தளை மாவட்டத்தில் மட்டும் 670 வீதிகளை நிர்மாணிக்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் எதிர்பார்க்கும் நாட்டை நாங்கள் உருவாக்குவோம் என்று மக்களிடம் நாம் பொறுப்புடன் கூறுகிறோம். 

எங்களிடம் தற்போது சில சிறிய தற்காலிக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. பால், எரிவாயு, நெல் விலை போன்ற தற்காலிக பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த சிக்கல்கள் அனைத்தும் கோவிட் நெருக்கடியின் காரணமாக கருப்பு சந்தைக்காரர்களால் உருவாக்கப்பட்டவை. இவை அனைத்தும் தற்காலிக பிரச்சினைகள். 

இந்த தற்காலிக பிரச்சினைகளின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால், அது ஒரு கனவு மாத்திரமே. இந்த நாட்டின் இதயமாக இருக்கும் மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

மழையில் நனையும் போது, மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்கள்தான் இப்படி நனைகிறார்கள் என்று மக்களுக்குத் தெரியும். அவர்களின் இரத்தத்தில் மத்திய வங்கியில் இருந்து திருடிய பணமே உள்ளது. 

இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய நாங்கள் இடமளிக்கவில்லை. அதை நிலையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஜனாதிபதியின் சரியான முடிவுகளால், சரிந்த பொருளாதாரம் இரண்டு மாத குறுகிய காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. எளிமையான வரி விதிப்பு முறையினால்தான் இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த கோவிட் தொற்று நோய்க்கு மத்தியிலும் தப்பியுள்ளது. இந்த நாடு நிச்சயம் வளர்ச்சி அடையும் என்று நாங்கள் மக்களிடம் கூறுகிறோம். எதிர்வரும் தேர்தலில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம் .

No comments:

Post a Comment