43 இலட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் - அமைச்சர் தினேஷ் குணவர்தன - News View

Breaking

Thursday, October 7, 2021

43 இலட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் - அமைச்சர் தினேஷ் குணவர்தன

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய அனைத்தையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் அவர்களது பொறுப்பை கவனத்திற் கொண்டு நாட்டின் 43 இலட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பையும் கடமையையும் சரிவர நிறைவேற்ற வேண்டுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்தடவையாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்கியுள்ளது. நேற்றையதினம் இவ் வைபவம் கல்வியமைச்சில் நடைபெற்றது. 

இங்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் கௌரவத்தை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் முகாமைத்துவம் செய்யப்படும் சவால்களுக்குட்பட்டுள்ள இந்த வேளையில் ஜனாதிபதியின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேவேளை முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் ஆசிரியர்களுக்கு கௌரவம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் அறிவையும் புகட்டுபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.

அதனால் நாம் அவர்களுக்கு வழங்கும் கௌரவத்துடன் அவர்களுக்கான பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். 

கல்வி அமைச்சர் என்ற வகையில் நானும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சு, திணைக்களங்கள் அனைத்தும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அந்த வகையில் கல்வித்துறையில் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்களை முன்னெடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய மேற்கொண்டு வருகிறோம்.

நிகழ்வுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளதுடன் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விஜித பேருகொட, சீதா அரம்பேபொல, அமைச்சின் செயலாளர் கபில பெரேரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment