விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று அமைச்சரவையில் தீர்மானம் : 3,60,000 கிலோ பால்மா புதன்கிழமை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டால் வினியோகம் - News View

Breaking

Monday, October 4, 2021

விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று அமைச்சரவையில் தீர்மானம் : 3,60,000 கிலோ பால்மா புதன்கிழமை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டால் வினியோகம்

பால்மா ஒரு கிலோவுக்கான விலையை 200 ரூபாவால் அதிகரிக்கும் ஆலோசனைக்கு இன்று அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என தாம் நம்புவதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வரவு செலவு திட்டம் வரை பால்மா ஒரு கிலோவுக்கான விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கம் காணப்பட்டுள்ளதாக மேற்படி சங்கத்தின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க மேற்படி யோசனை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறெனினும் ஒரு கிலோ பால்மாவுக்கு 200 ரூபா அதிகரிக்கப்பட்டாலும் 150 ரூபா நட்டத்திற்கே பால்மாவை விற்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதியாளர்கள் நட்டத்திற்கு பால்மாவை விநியோகிப்பதற்கு தயாரில்லை என்பதால் தற்போது சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதானால் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அதிகரித்தால் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது பால்மா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள 360,000 கிலோ பால்மா புதன்கிழமை விடுவிக்கப்பட்டால் வியாழக்கிழமையளவில் சந்தைக்கு வினியோகிக்க முடியும். 

முழுமையான பால்மா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மேலும் நான்கு வாரங்கள் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment