20 க்கு 20 உலகக் கிண்ணத்திற்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம் - News View

Breaking

Monday, October 4, 2021

20 க்கு 20 உலகக் கிண்ணத்திற்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த (03) முதல் ஆரம்பமாகியிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை குறிப்பிட்டிருக்கின்றது.

16 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்குபெறுகின்ற 07ஆவது ஆடவர் 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன.

அதன்படி இந்த 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 45 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு ஒவ்வொரு போட்டிக்குமான டிக்கெட்டுக்களையும் ஐசிசி இன் உத்தியோகபூர்வ இணையதளங்களில் ஒன்றான https://www.t20worldcup.com/tickets இல் கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

டிக்கெட் விற்பனை ஒரு பக்கமிருக்க கொவிட்-19 வைரஸ் நிலைமைகள் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில், இந்த 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்காக நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தினையும் பார்வையிட 70% பார்வையாளர்களுக்கு (அபுதாபி மைதானத்தின் சிறப்பு பார்வையாளர் வசதி – Socially Distanced ‘Pods’ உள்ளடங்கலாக) வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க, ஓமானில் 20 க்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் போது அதனை 3000 பார்வையாளர்கள் பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான டிக்கெட்டுக்களின் விலைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 30 திர்ஹம்களில் (இலங்கை நாணயப்படி சுமார் 1,600 ரூபா) இருந்தும், ஓமானில் 10 ரியால்களில் (இலங்கை நாணயப்படி சுமார் 5,100 ரூபா) இருந்தும் ஆரம்பிக்கின்றன.

இந்த 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் நடைபெறும் போது 20 க்கு 20 உலகக் கிண்ணத்தினை பார்வையிட வரும் பார்வையாளர்கள் இடையே கொவிட்-19 வைரஸ் தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment