ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பள்ளிவாயலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அங்குள்ள இமான் பர்கா பள்ளிவாயலில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து வரும் படங்களில் சிதைந்த ஜன்னல் பாகங்கள் மற்றும் உடல்கள் தரையில் கிடப்பதை பார்க்க முடிகிறது.
குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்த வழிபாட்டாளர்கள் மிர்வைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக உள்ளூர் மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிபிசி நிருபர் சிக்கர்ந்தர் கெர்மானி, இஸ்லாமி அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவின் உள்ளூர் கிளையான ஐஎஸ்-கே இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது என்று கூறுகிறார்.
இந்த ட்விட்டில் பதிவில் பகிரப்பட்டுள்ள காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.
நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அரசு தரப்பிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இரண்டாவது தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா பள்ளிவாயலை தற்கொலை குண்டுதாரி இலக்கு வைத்ததில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு கந்தஹாரில் ஷியா பள்ளிவாயல் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முழு விவரங்களுக்கு தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
No comments:
Post a Comment