LTTE யின் பெயரைக் கேட்டாலே அஞ்சிப்பதுங்கிய லொஹான் ரத்வத்த தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகின்றார் : அரசாங்கத்தினால் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பலர் அதிருப்தியடைந்து விலகிச் செல்கின்றார்கள் : சரத் பொன்சேகா - News View

About Us

About Us

Breaking

Thursday, September 16, 2021

LTTE யின் பெயரைக் கேட்டாலே அஞ்சிப்பதுங்கிய லொஹான் ரத்வத்த தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகின்றார் : அரசாங்கத்தினால் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பலர் அதிருப்தியடைந்து விலகிச் செல்கின்றார்கள் : சரத் பொன்சேகா

நா.தனுஜா

முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் பெயரைக் கேட்டாலே அஞ்சிப்பதுங்கிய லொஹான் ரத்வத்தே, இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகின்றார். இது மிகவும் இழிவான செயலாகும். துணிச்சலற்ற, முதுகெலும்பற்ற நபர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் சட்ட நடவடிக்கை என்னவென்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக நாடு முடக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் வீதிகளில் வாகன போக்குவரத்து வழமைபோன்று காணப்படுவதுடன் குறைந்தபட்சமாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அவ்வாறிருப்பினும்கூட பொதுமக்கள் தாமாகவே உணர்ந்து சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக செயற்பட்டமையின் விளைவாக ஓரளவிற்கு சாதகமான பெறுபேறைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கின்றது.

மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் காலங்களிலும் இதனைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களும் நடவடிக்கைகளும் சுகாதாரப் பிரிவினர் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றனவா? என்ற சந்தேகம் நிலவுகின்றது. ஆகவே பொதுமக்கள் தத்தமது சுகாதாரப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தினால் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பலர், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து அவர்களாகவே விலகிச் செல்கின்றார்கள். குறிப்பாக மிகவும் திறமையான சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பான தொழில்நுட்பக் குழுவிலிருந்து விலகி வருகின்றார்கள்.

தற்போதைய அரசாங்கத்தினால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் மிகக்குறுகிய காலத்திலேயே பதவி விலகிச் செல்கின்றார். இவ்வாறு அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்காக முனைப்புடன் செயற்பட்ட புத்திஜீவிகள், விசேட நிபுணர்கள் பலரும் இப்போது வெகுவாக அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.

ஒவ்வொரு பதவிகளுக்கும் தகுதி வாய்ந்தவர்களை நியமிப்பதன் ஊடாகவே நாட்டை முன்னேற்ற முடியும். மாறாக போதைப் பொருள் வர்த்தகர்களையும், துப்பாக்கியைக் காண்பித்து அடாவடித்தனத்தில் ஈடுபடுவோரையும் நியமிப்பதன் மூலம் எதனையும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment