மியன்மாரின் இராணுவ அரசில் சர்ச்சைக்குரிய பிக்கு விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 8, 2021

மியன்மாரின் இராணுவ அரசில் சர்ச்சைக்குரிய பிக்கு விடுதலை

தேசியவாதம் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு கருத்துகளால் பெரிதும் அறியப்படும் மியன்மாரின் சர்ச்சைக்குரிய பிக்குவான அஷின் விராத்துவை அந்நாட்டு இராணுவ ஆட்சி விடுதலை செய்துள்ளது.

சிவில் அரசுக்கு எதிராக தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாக அவர் மீது முன்னர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் அந்த குற்றச்சாட்டு அகற்றப்பட்டுள்ளது.

இந்த கடும்போக்குடைய பௌத்த பிக்கு இராணுவ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவும் பிரபலமானவர். இவர் குறிப்பாக ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக எதிர்ப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தார்.

அண்மைய ஆண்டுகளில் இவர் இராணுவ ஆதரவு பேரணிகளில் தோன்றி தேசியவாத உரைகளை நிகழ்த்தி வந்ததோடு அப்போதைய தலைவராக இருந்த ஆங் சான் சூச்சி மற்றும் அவரது ஆளும் ஜனநாயத்திற்கான தேசிய லீக் கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

சிவில் அரசுக்கு எதிராக வெறுப்பு மற்றும் அவமதிப்பைத் தூண்டியதாக 2019 ஆம் ஆண்டு விராத்து மீது குற்றங்காணப்பட்டது.

ஆரம்பத்தில் தலைமறைவாக இருந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொலிஸாரிடம் சரணடைந்தார். அது தொடக்கம் அவர் வழக்கு விசாரணைக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுவதாக இராணுவ அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தபோதும் அதற்கான காரணம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

அவர் இராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அவரின் உடல் நிலை குறித்து எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment