செயற்பாடுகளும், தீர்மானங்களும் இலங்கையை தனிமைப்படுத்துவதாக அமையக் கூடாது - ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் விளக்கம் - News View

Breaking

Sunday, September 12, 2021

செயற்பாடுகளும், தீர்மானங்களும் இலங்கையை தனிமைப்படுத்துவதாக அமையக் கூடாது - ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் விளக்கம்

லியோ நிரோஷ தர்ஷன்

பொறுப்புக்கூறலை கட்டியெழுப்புவதில் இலங்கை இதயசுத்தியுடன் செயற்படுகிறது. இந்த நிலையில் பிரச்சினைகளை தீர்ப்பதில் உறுதியானதும் தொடர்ச்சியானதுமான முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் பேரவையின் செயற்பாடுகளும் தீர்மானங்களும் இலங்கையை தனிமைப்படுத்துவதாக அமையக் கூடாது என ஜெனிவாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. முதல்நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை குறித்த விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பச்செலட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

30/1 தீர்மானத்திலிருந்து விலகியமை உள்ளிட்ட பல நடவடிக்கைளினால் இலங்கை முழு அளவில் பொறுப்புக் கூறலுக்கான கதவுகளை அடைத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், ஜெனிவாவின் 46/1 தீர்மானமானது இலங்கையை தனிமைப்படுத்தும் என்பதோடு வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை முற்றிலும் நிராகரிப்பதாகவும் இத்தகையதொரு சர்வதேச கவனம் இலங்கை மீது தேவையற்றது என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இம்முறை அனுப்பி வைத்துள்ள விளக்கமளிப்பில் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இம்முறை ஜெனிவாவிற்கு அனுப்பி வைத்துள்ள விளக்கமளிப்பில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளின் முன்னேற்ற நிலைமைகள் என்பவற்றைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மக்களின், குறிப்பாக வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை தசாப்தங்களாக இல்லாது செய்த தீவிரவாதத்தை ஒழித்தோம்.

நாட்டில் சமாதானத்தையும் ஸ்தீர தன்மையையும் ஏற்படுத்தியதுடன் மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம் சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தல், மில்லியன் கணக்கான மிதி வெடிகள் மற்றும் வெடிக்காத படைக்கல பொருட்களை அகற்றுதல் ,இராணுவ கட்டுப்பாட்டு காணிகளை விடுவித்தல், ஜனநாயக ரீதியிலான தேர்தல்களை நடாத்துதல், பொறுப்புக் கூறல் மற்றும் காணமலாக்கப்பட்டோர் தொடர்பில் பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தல், சிறுவர் படைவீரர்கள் மற்றும் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க போராளிகளுக்கு புனர்வாழ்வளித்தல், பாரியளவிலான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்ளல், வாழ்வாதார வாய்ப்புக்களை ஊக்குவித்தல் மற்றும் மோதலினால் பாதிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட இடங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மோதல்களின் பின்னணியில் எழுகின்ற சவால்களை பொருத்த வரையில் குறிப்பாக மோதலுக்கு பின்னராக எஞ்சியுள்ள பிரச்சினைகள் எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நீதியாகவும், நல்லிணக்கத்துடனும் தீர்க்கப்பட வேண்டும்.

இழப்பீடுகளை வழங்குவதற்கும்,காணமலாக்கப்பட்டோரை கண்டறிவதற்கும், பொறுப்புக் கூறலுடனான செயற்பாடுகளை முன்னெடுத்தல், தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகல மக்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் போன்றவற்றை உறுதி செய்ய சுயாதீன நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தொற்று நோய் நிலைமைகள் காணப்பட்ட போதிலும் உள்ளக பொறிமுறைகள் ஊடாக மனித உரிமைகள் சார் பிரச்சினைகள் குறித்து கணிசமான முன்னெடுப்புக்களை இலங்கை செய்து வருகின்றது.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஐக்கிய நாடுகளின் பொறிமுறைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக அத்தகவல்களை உறுதிப்படுத்துவதற்கும், மீள் பதிவுகளை இல்லாது செய்யவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு பதிலளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு என்பன பொறுப்புக் கூறல் குறித்த கேள்விகளை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முன்னைய ஆணைக்குழுக்கள் கூட பொறுப்புக் கூறல் தொடர்பில் பதிலளிக்க ஆணையாளர்களை அழைத்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஆணைக்குழு, அதன் இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் படி பொறுப்புக் கூறல் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட வேண்டும்.

தற்போதைய ஆணைக்குழுவானது அதன் இடைக்கால அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளபடி பொறுப்புக் கூறல் பிரச்சினைகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தியுள்ளமை முக்கியமானதாகும்.

தற்போது உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளிகளை பூர்த்தி செய்யவும், இது தொடர்பான இலங்கையின் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பழக்கங்களின் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அளவுகோளின் சமனிலையை உறுதிப்படுத்தும் பொருட்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை மறுப்பரிசீலணை செய்வதற்காக அமைச்சரவை உப குழுவும், குறித்த அமைச்சரவை உபகுழுவிற்கு உதவுவதற்காக ஒரு நிபுணர்கள் குழுவும் நிமிக்கப்பட்டன.

உப குழுவானது, நீதி அமைச்சு, சட்ட வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளை உள்ளடக்குகிறது, அவர்கள் மூன்று மாதத்தினுள் (24 செப்டெம்பர் 2021) அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பொறுத்த வரையில் அரசாங்கமானது தனது ஆலோசனை செயன்முறையை விரிவாக்கவும் திறன்பட செய்வதற்கும் சிவில் சமூகம் போன்ற பங்குதாரர்களையும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற தொழில்முறை சங்கங்களையும், இலங்கை தேசிய பல்கலைக்கழகத்தின் சட்ட பீடங்கள் போன்ற கல்வியியல் நிறுவனங்களையும் உள்ளடக்குகிறது.

இவ்வாறானதொரு நிலையில் பொறுப்புக் கூறலை கட்டியெழுப்பல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதில் இலங்கையின் உறுதியானதும் தொடர்ச்சியானதுமான முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் பேரவையின் செயற்பாடுகளும் தீர்மானங்களும் இலங்கையை தனிமைப்பத்துவதாக அமைய கூடாது என குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment