அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இதுவரை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, September 27, 2021

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இதுவரை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க

(நா.தனுஜா)

கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றார்கள். அவ்வொப்பந்தத்தின் விபரங்கள் எவையும் இதுவரையில் நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அரசாங்கம் ஹெட்ஜிங் ஒப்பந்தத்தினால் ஏற்பட்டதை விடவும் மிக மோசமான இழப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் இட்டுள்ளது என்றே தோன்றுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீதமான பங்குகளை அமெரிக்காவிற்குச் சொந்தமான நியூ போர்ட்ஸ் எனெர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய வகையிலான வெளிநாட்டு முதலீட்டின் ஊடாக இலங்கையின் மின்னுற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகவே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

இதன் மூலம் மின்னுற்பத்தி அலகு ஒன்றின் உற்பத்திச் செலவு குறைவடைவதால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

அதுமாத்திரமன்றி கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதன் விளைவாக மேலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

குறிப்பாக எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய ஏனைய உலக நாடுகளிடமிருந்து இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

இதனுடன் இணைந்ததாக திரவ இயற்கை எரிவாயு விநியோகம் தொடர்பான தனியுரிமையையும் அந்நிறுவனத்திடம் வழங்குகின்ற ஒப்பந்தமும் இதில் உள்ளடங்குகின்றது.

இதன்மூலம் இலங்கைக்கு அவசியமான திரவ இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கின்ற தனியுரிமைசார் ஆதிக்கம் அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமானதாக மாறும். ஆகவே அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் எரிசக்தி தொடர்பான மாநாட்டில் உரையாற்றுகையில், எதிர்வரும் 2050 ஆண்டளவில் இலங்கை புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாற்று எரிசக்தி மூலங்களுக்குச் செல்லும் என்று கூறினார்.

சில நிறுவனங்கள் சூரியசக்தி, காற்று மற்றும் நீர் மூலமான மின்னுற்பத்தியிலிருந்து மாற்று மின்னுற்பத்தி ஆற்றலுக்கு நகர்கின்றன. இது குறித்து அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன?

அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் தமக்கு இவ்வொப்பந்தம் தொடர்பில் எதுவும் தெரியாது என்று கூறுகின்றார்கள். அதுமாத்திரமன்றி இதுவரையில் அவ்வொப்பந்தம் குறித்த எந்தவொரு தகவல்களும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதனூடாக அரசாங்கம் ஹெட்ஜிங் ஒப்பந்தத்தினால் ஏற்பட்டதை விடவும் மிகமோசமான இழப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் இட்டுள்ளது என்றே கருதுகின்றோம்.

அதுமாத்திரமன்றி நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

இலங்கையில் பல முக்கிய கட்டிடங்கள் மற்றும் நிலங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. விமானப்படைத்தள அமைவிடம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை சி.ஐ.சி.டி நிறுவனத்திடற்கு வழங்குவது குறித்து அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளங்கள் ஏன் இவ்வாறு விற்கப்படுகின்றன? என்றும் அவர் கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment