உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேச நிறுவனங்களுக்கு ஒருபோதும் வழங்க முடியாது : ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடர் இம்முறை இலங்கைக்கு சார்பாக அமைந்தது - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, September 27, 2021

உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேச நிறுவனங்களுக்கு ஒருபோதும் வழங்க முடியாது : ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடர் இம்முறை இலங்கைக்கு சார்பாக அமைந்தது - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேச நிறுவனங்களுக்கு ஒருபோதும் வழங்க முடியாது. அதற்கான தேவையும் எமக்கு கிடையாது. அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்கள் தலையிடுவது அரசியலமைப்பிற்கு முரணாக அமைவதுடன், அரசியல் கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் உள்ளக விவகாரத்தில் சர்வதேச அமைப்புக்கள் மனித உரிமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தலையிட முடியாது என்பதை சர்வதேச நாடுகளும், சர்வதே அமைப்புக்களும் இம்முறை ஏற்றுக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் இம்முறை இலங்கைக்கு சார்பாக அமைந்தது எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகில் பெரும்பாலான நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மனித குலத்திற்கு பொருத்தமற்ற வரையறைகளை ஒரு சில நாடுகள் இன்றும் செயற்படுத்தி வருகின்றன.

இவ்விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கவனம் செலுத்தவில்லை. மாறாக இலங்கை விவகாரத்திற்கு மாத்திரம் ஒவ்வொரு முறையும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

அனைத்து நாடுகளையும் சமமான முறையில் மதிப்பிடக்கூடாது. மக்கள் தொகை, செல்வ வளம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் வேறுப்படுத்தக் கூடாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மூல கொள்கையாக காணப்பட்டது. ஆனால் தற்போது இந்த கொள்கை காலமாற்றத்திற்கேற்ப மாற்றமடைந்துள்ளது.

இலங்கைக்கு எதிராக சாட்சிகளை திரட்டுவதற்கு சர்வதேச அமைப்புக்கள் பெருமளவிலான நிதியை செலவிடுகின்றன. சாட்சிகளை திரட்டுபவர்கள் யார்? அவர்கள் எக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது பகிரங்கப்படுத்தவில்லை.

இலங்கைக்கு எதிராக சாட்சியம் திரட்டுவதற்கு செலவிடும் நிதியை வறுமை கோட்டில் உள்ள நாடுகளின் முன்னேற்றத்திற்காகவும், கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்கும் செலவு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதை சர்வதேச புலம்பெயர் அமைப்புக்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாது என்பதை கடந்த வாரம் இடம்பெற்ற மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் போது அணிசேரா நாடுகளும், அஸர்பைஜான், எகிப்து உள்ளிட்ட நாடுளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபை கூட்டம் இலங்கைக்கு சாதகமாக காணப்பட்டது. கூட்டத் தொடரின்போது பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம்.

துருக்கி
தீவரவாத செயற்பாடுகள் சகல நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகிறது. தீவிரவாத செயற்பாட்டை இல்லாதொழித்தல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் துருக்கி நாட்டுக்கு சிறந்த அனுபவம் உண்டு. தீவிரவாதம் ஒழிப்பு தொடர்பிலான ஒத்துழைப்பை வழங்கமாறு துருக்கி நாட்டு இராஜதந்திரியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அவுஸ்ரேலியா
திறன் அபிவிருத்தி கல்வி மற்றும் தொழிற்துறையில் அவுஸ்ரேலியா முன்னேற்றமடைந்துள்ளது. திறன் அபிவிருத்தி கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அவுஸ்ரேலியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

குவைட்
குவைட் நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பை விரிவுப்படுத்தவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை குவைட் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

கட்டார்
இலங்கைக்கு எரிபொருளை நிவாரண அடிப்படையில் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா
இலங்கையில் உள்ள கோயில்கள், விகாரைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் நிதியை செலவழித்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறும் அபிவிருத்தியின் முன்னேற்றத்தை இலங்கைக்கான இந்திய துதரகம் அறிவிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தோனேஷியா
இந்து சமுத்திர பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான புலனாய்வு தகவல் பரிமாற்றம் குறித்த அவதானம் செலுத்தப்பட்டது.

தாய்லாந்து
தேரவாத பௌத்த கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்புடன் செயற்பட இணககம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை அனைத்து நாடுகளுடன் பொதுவான வெளிவிவகார கொள்கையுடன் செயற்படும்.

நாடுகளுக்கிடையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அனைத்து நாடுகளுடன் நட்புறவுடன் செயற்படுவோம் என்றார்.

No comments:

Post a Comment