(எம்.எப்.எம்.பஸீர்)
கடந்த 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் திவி நெகும திணைக்களத்தின் கீழ் ஜீ.ஐ. குழாய்களை கொள்வனவு செய்து அதனை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விநியோகித்ததாக கூறப்படும் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு 33 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் திவினெகும பணிப்பாளர் கித்சிரி ரணவக்கவுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே கொரோனா நிலைமையை அடிப்படையாகக் கொண்டு நீதிச்சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, குறித்த வழக்கு விசாரணைகளை ஒத்தி வைக்க தீர்மானித்துள்ள நீதிபதி, அதனை நவம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கும் 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த மோசடி நடவடிக்கை இடம்பெற்றதாக கூறி மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப் பத்திரிகையை சட்டமா அதிபர் கடந்த 2017 மார்ச் 8 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அது முதல் இவ்வழக்கு விசாரணைகள் பல்வேறு தவணைகளுக்கு ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்துள்ளது.
தண்டனை சட்டக் கோவையின் 113(ஆ), 102, 388 ஆகிய பிரிவுகளின் கீழும் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5 ஆவது அத்தியாயத்தின் கீழும் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய அப்போதைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணி லால் வைத்திய திலக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்போதைய முன்னாள் அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவையும் திவினெகும முன்னாள் பணிப்பாளர் கித்சிரி ரணவக்கவையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.
அதன்படி இவ்வழக்கில் குறித்த இருவரும் . தலா 20 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில்களில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment