(இராஜதுரை ஹஷான்)
வெளிநாட்டு முதலீடு விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய தேவை கிடையாது. நாட்டின் எதிர்காலத்தையும், மின் வலுத்துறையின் முன்னேற்றத்தையும் கருத்திற் கொண்டு கெரவலபிடிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தே முன்னேற்றமடைந்துள்ளன. நடைபாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை போன்று அந்நாட்டு மக்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கெரவலபிடிய மின் நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமையால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று குறிப்பிடுவது முட்டாள்த்தனமானது.
டெலிகொம் நிறுவனத்தின் 80 சதவீத உரிமம் மலேசியா உள்ளிட்ட பிற நாடுகள் வசம் உள்ளன. இதனால் எவ்வித பாதிப்பும் இதுவரையில் ஏற்படவில்லை. அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது.
கெரவலபிடிய மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியதற்கு பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவிகிறார்கள்.
ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் பங்காளி கட்சி தலைவர்களுக்கு பிரதமர் தலைமையில் இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தின் போது தெளிவுபடுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்காளி கட்சி தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச , மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அரசியல்வாதிகின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அமைய ஒப்பந்தங்களை மாற்றியமைக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கெரவலபிடிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டம் வெற்றி பெற்றால் மின்சார கட்டணம் 30 சதவீதத்தினால் குறைவடையும் என்றார்.
No comments:
Post a Comment