தொற்றுக்குள்ளாகும் விசேட தேவையுடையோருக்கு அன்றாட தேவைகளை நிறைவு செய்யக் கூடியவாறான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

Breaking

Monday, September 13, 2021

தொற்றுக்குள்ளாகும் விசேட தேவையுடையோருக்கு அன்றாட தேவைகளை நிறைவு செய்யக் கூடியவாறான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

விசேட தேவையுடையோர் கொவிட் தொற்றுக்கு உள்ளான பின்னர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதும், இடைநிலை சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படும் போதும் அவர்களது அன்றாட தேவைகளை நிறைவு செய்யக் கூடியவாறான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்தில் நாளாந்தம் இனங்காணப்படுகின்ற கொவிட் தொற்றாளர்களில் விசேட தேவையுடைய மற்றும் அங்கவீனமுடைய பலரும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறானவர்களில் பெருமளவானோருக்கு தமது அன்றாட கடமைகளை தாமே நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

எனவே இவ்வாறான தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் போதும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் போதும் அவர்களுக்கான அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது அல்லது இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களது உதவியாளர்கள் அல்லது உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதில்லை.

இதனால் பல மரணங்கள் பதிவாகக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இது தொடர்பில் உரிய நடைமுறையொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment