(இராஜதுரை ஹஷான்)
சுகாதார பாதுகாப்பினை பின்பற்றாத பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனருக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து மற்றும், சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு ஊரடங்கு தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படவுள்ள நிலையில் பொது போக்கு வரத்து சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு தழுவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நாளை தளர்த்தப்பட்டவுள்ளது.
இந்நிலையில் நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் கொவிட் தாக்கத்தை வெற்றி கொள்ள முடியும்.
பொது போக்கு வரத்து சேவையை வழமை போன்று ஆரம்பித்தால் மீண்டும் கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமடைவதற்கான சாத்தியம் உள்ளது என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இதனை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையிலான போக்கு வரத்து சேவையை இரண்டு வார காலத்திற்கு முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கிடையிலான பொது போக்கு வரத்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து இந்த இரண்டு வார காலத்தில் சிறந்த திட்டம் வகுக்கப்பட்டு செயற்படுபடுத்தப்படும்.
மாகாணத்திற்குள் புகையிரத சேவை இரண்டு வார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவையில் சமூக இடைவெளியை பேணுவது தொடர்பில் முறையான திட்டத்தை வகுக்குமாறு புகையிரத திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையில் காணப்படும் சன நெரிசலை குறைக்க வேண்டுமாயின் அரச மற்றும் தனியார் துறையினரது கடமையின் ஆரம்பம் மற்றும் நிறைவு நேரத்தை மாற்றியமைக்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சிடமும், தொழிற்துறை அமைச்சிடமும் யோசனை கோரப்பட்டுள்ளது.
புகையிரத போக்கு வரத்து சேவை இல்லாத காரணத்தினால் மாகாணங்களுக்குள்ளான அரச மற்றும் தனியார் பேருந்து சேவை வழமைக்கு மாறாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாகாண எல்லைகளில் இருந்து பிறிதொரு மாகாணத்திற்கு பயணிகள் நடந்து செல்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும். பாதுகாப்பு தரப்பினர் மாகாண எல்லைகளில் கண்காணிப்பு சேவையில் ஈடுபடுவார்கள்.
மாகாணங்களுக்குள்ளான பேருந்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும்.
அனைத்து அறிவுறுத்தல்களையும் பாதுகாப்பு தரப்பினரை வைத்துக் கொண்டு செயற்படுத்த முடியாது. பொதுமக்கள் தங்களின் சுய பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை கொள்ள வேண்டும்.
பேருந்து சேவையில சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு உண்டு. ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை பேருந்தில் ஏற்ற வேண்டும். சுகாதார பாதுகாப்பினை பின்பற்றாத பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனருக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும். கைப்பற்றப்படும் பேருந்துகள் மறு அறிவித்தல் வரை விடுவிக்கப்படாது என்றார்.
No comments:
Post a Comment