உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு - மயானத்தில் சென்று வழங்குமாறு பொலிஸாருக்கு மகன் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு - மயானத்தில் சென்று வழங்குமாறு பொலிஸாருக்கு மகன் தெரிவிப்பு

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுக் கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் (24) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் AR/724/21இல் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அதனடிப்படையில் பொலிஸாரல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த தடையுத்தரவில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்தவுகள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென முல்லைத்தீவு பொலிஸார் அறிக்கை செய்துள்ளனர்.

எனவே நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள் 24.09.2021 தொடக்கம் 27.09.2021 வரையான காலப்பகுதிக்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவு கூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையினை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 106 இற்கு அமைவாக பிறப்பிக்கின்றேன் எனக் குறித்த நீதிமன்றத் தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, ஆகியோருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளை பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் நேற்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதனுடைய இல்லத்துக்கு எடுத்து சென்று அவருடைய மகன் பீற்றர் இளஞ்செழியனிடம் வழங்கியபோது இதில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு வழங்குவதாக இருந்தால் முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் கொண்டு சென்று வழங்குமாறும் கூறி பொலிஸாரை திரும்பி அனுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment