வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேங்கிக்கிடக்கும் கொரோனா சடலங்கள் - நிதி அமைச்சர் பஷில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார் சுமந்திரன் - News View

Breaking

Tuesday, September 7, 2021

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேங்கிக்கிடக்கும் கொரோனா சடலங்கள் - நிதி அமைச்சர் பஷில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார் சுமந்திரன்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே உடனடியாக எரிவாயு மின் தகன மேடைகளை வடக்கு, கிழக்கில் அமைக்க நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய எரிப்பதற்கு அவசியமான எரிவாயு மின் தகன மேடைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதியளவு இல்லை. இதனால் வடக்கு, கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே எரிவாயு மின் தகன மேடைகள் உள்ளன. மட்டக்களப்பில் இல்லை. எனவே நிதி அமைச்சர் அவசரமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு தற்காலிகமாகவேனும் எரிவாயு மின் தகன மேடைகளை வடக்கு, கிழக்கில் அமைத்து கொரோன வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment