(நா.தனுஜா)
கொவிட்-19 பரவல் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணியிலிருந்து தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம விலகியமை நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன், இலங்கையில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வது யார்? இதற்குப் பொறுப்புக்கூறப் போவது யார்? நாங்கள் எதனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் மற்றும் ஊடகங்களினால் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில் சுகாதாரத் துறைசார் வைத்திய நிபுணர்கள் பலரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றது.
பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டுமென தான் கூறவில்லை என்றும் 40 நிமிட இணைய வழிக் கலந்துரையாடலில் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக் கூடிய வகையில் அதனை செய்தியாக வெளியிடுகின்ற ஊடங்களின் செயற்பாட்டினால் பெரிதும் கவலையும் களைப்பும் அடைந்திருப்பதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயெதிர்ப்புப்பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே அவரது பேஸ்புக் பதிவின் ஊடாகத் தெரிவித்திருந்தார்.
அவரது பேஸ்புக் பதிவை மேற்கோள்காட்டி வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.
'ஊடகங்கள் அவற்றின் தேவைக்கு ஏற்றவாறு கருத்துக்களை எவ்வாறு திரிபுபடுத்துகின்றன என்பதை பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பேஸ்புக் பதிவின் ஊடாக நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது' என்று சுட்டிக்காட்டியிருக்கும் அவர், 'விசேட நிபுணர்களும் எமது நாடும் பாதிப்படைவதற்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் வாய்ப்பேற்படுத்தியிருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை கொவிட்-19 பரவல் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணியிலிருந்து தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம விலகியமை நேற்று முன்தினம் முக்கிய பேசு பொருளாக மாறியிருந்தது.
கொவிட்-19 பரவல் கட்டுப்பாடு தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணியினால் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களுடன் உடன்பட முடியாமையே அவர் அதிலிருந்து விலகுவதற்கான பிரதான காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசேட ஜனாதிபதி செயலணியிலிருந்து சிரேஷ்ட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரமவின் விலகல் தொடர்பிலும் தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன், 'இது இலங்கை மக்களைப் பொறுத்த வரையில் பேரிழப்பாகும்.
இலங்கையில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வது யார்? இதற்குப் பொறுப்புக்கூறப் போவது யார்? நேர்மையுடன் செயற்படுவது யார்? நாங்கள் எதனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்?' என்று விசனம் வெளியிட்டிருக்கின்றார்.
மேலும் கொவிட்-19 பரவல் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணி தனது இயலுமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததன் காரணமாக அதிலிருந்து விலகத் தீர்மானித்திருப்பதாக வைத்திய நிபுணர் அஷோக குணரத்ன கூறியிருப்பதாக அவரை மேள்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment