ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சாரணர் ஆணையாளர் நியமனத்தை சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 16, 2021

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சாரணர் ஆணையாளர் நியமனத்தை சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல்

(எம்.எப்.எம். பஸீர்)

பிரதான சாரணர் ஆணையாளர் பதவிக்கு ஜனாதிபதியால் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பதவியில் கடமைகளை முன்னெடுப்பதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சாரணர் பேரவையின் உப தலைவர் பீ. மைக்கல்டேமியன் சில்வா உள்ளிட்ட அப்பேரவையின் 11 உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அம்மனுவின் பிரதிவாதிகளாக சாரணர் அமைப்பின் செயலாளர், ஜனாதிபதி செயலர், புதிய சாரணர் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஜனப்ரித் பெர்ணான்டோ மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சாரணர் இயக்கத்தின் பிரதான ஆணையாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும்போது ஜனாதிபதி, சாரணர் இயக்கத்தின் 4 ஆவது சட்ட ஏற்பாட்டுக்கு அமைய தமது குழுவின் பரிந்துரைகளைப் பெற்று அதன் பிரகாரம் நியமனம் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, குறித்த பதவிக்கு தாம் அளித்த பரிந்துரையில் ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரான சந்ரா வாகிஷ்டவை நியமிக்குமாறு கோரியதாகவும், எனினும் அதனை கணக்கில் கொள்ளாது தாங்கள் குழுவின் பிரதி ஆணையாளராக கடமையாற்றிய சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்ணான்டோவை நியமித்தமை சாரணர் இயக்க சட்ட திட்டங்களுக்கு முரணானது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நியமனங்களை முன்னெடுக்க ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என குறிப்பிடும் மனுதாரர்கள், அதனால் இங்கு அடிப்படை உரிமை மீறல் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறு கோரியுள்ளனர்.

அதனால் தற்போது சாரணர் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஜனப்பிரித் பெர்ணான்டோவை அப்பதவியில் செயற்பட தடை விதித்தும், சந்ரா வாகிஷ்டவை அப்பதவியில் நியமிக்க உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பிரதிவாதிகளிடமிருந்து ஒரு கோடி ரூபாவை நட்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment