கொலை செய்து விட்டு தப்பிய சந்தேகநபர் மூன்று வாரத்தின் பின் கைது - மற்றையவருக்கு வலை வீச்சு - News View

Breaking

Sunday, September 12, 2021

கொலை செய்து விட்டு தப்பிய சந்தேகநபர் மூன்று வாரத்தின் பின் கைது - மற்றையவருக்கு வலை வீச்சு

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று (12) திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தேடப்பட்டு வரும் மற்றைய சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

கொலையில் ஈடுபட்டவர்களான உறவினர்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் திருகோணமலை பொலிஸ் பிரிவில் தலைமறைவாகி உள்ளதாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்தது. 

தற்போதை கொவிட்-19 நிலைமை காரணமாக அங்கு சென்று சந்தேகநபரைக் கைது செய்ய முடியாத நிலையில் திருகோணமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலளிக்கப்பட்டது.

திருகோணமலை பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் 41 வயதான சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில் அவரை தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment