கிண்ணியாப் பிரதேசசபை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் - இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

கிண்ணியாப் பிரதேசசபை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் - இம்ரான் எம்.பி

கிண்ணியா பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளதாக அந்தச் சபையின் உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, நான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மாவட்ட உள்ளூராட்சி சபையொன்றின் செயற்பாடுகள் பற்றி பகிரங்கக் குற்றச்சாட்டு வெளிவருமளவுக்கு சென்றிருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீதி கிரவலிடப்பட்டு புனரமைக்கப்பட்டதாக பொய்யாகக் கூறி கிண்ணியா பிரதேச சபையினால் நிதி செலவிடப்பட்டுள்ளதாக அந்தச் சபையின் உறுப்பினர்கள் சிலரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீதி கிரவலிட்டு செப்பனிடப்படவில்லை. சில மணித்தியாலயங்கள் மோட்டர் கிரட்டர் வேலை மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் அரச உத்தியோகத்தர்களும் பொதுநல அமைப்புகளும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல நீர்வழிந்தோடும் குழாய்கள் பொருத்தப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக நிதி பெறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களுக்கு சில மாத காலம் வரவுசெலவுகள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் இவை போல வேறு சில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ அவரின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் ஊழலற்ற நிர்வாகம் பற்றிச் சொல்லியுள்ளார். ஆனால் அவரின் ஆட்சியில் எங்கும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களே தற்போது வெளிவருகின்றன.

இவை தொடர்பில் நீதியான விசாரணை செய்யப்பட வேண்டும். தவறு இடம் பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில விடயங்களை பூசி மெழுகி சமாளித்து விடுவார்கள் என்று பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பதால் இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதியான விசாரணை செய்து அதனை வெளிப்படுத்த வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment