நாட்டு மக்களை ஏமாற்றுதல், வாக்குறுதிகளை மீறுதல், மூட நம்பிக்கையைப் பிரசாரம் செய்தல் கொள்கைகளின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

நாட்டு மக்களை ஏமாற்றுதல், வாக்குறுதிகளை மீறுதல், மூட நம்பிக்கையைப் பிரசாரம் செய்தல் கொள்கைகளின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

நாட்டின் தகவல் கட்டமைப்பு என்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதுடன் அதனை மிகுந்த அவதானத்துடன் கையாள வேண்டும். அதில் இடம்பெறக் கூடிய தவறுகளும் சூழ்ச்சிகரமான மோசடிகளும் தேசிய பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய தகவல் கட்டமைப்பில் சேமிக்கப்பட்டிருந்த தகவல்கள் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் அழிக்கப்பட்டமை பற்றிய விபரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியமைக்காகவே மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய வீரர்கள், இப்போது மீண்டுமொரு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகக் கூறுகின்றார்கள். பின்னர் அதனை மறுக்கின்றார்கள். எனவே உண்மையில் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த தகவல்கள் அரசாங்கத்திற்கு கிடைத்திருந்தால், அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அவர்களையும் பங்காளிகளாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தகவல் கட்டமைப்பிலிருந்து தகவல்கள் அழிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் ஓரங்கமாக அது குறித்து வாக்கு மூலம் அளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோரும் அவருடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றிருந்த நிலையில், அங்கு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் தகவல் கட்டமைப்பு என்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதுடன் அதனை மிகுந்த அவதானத்துடன் கையாளவேண்டியது அவசியமாகும். அதில் காணப்படும் குறைபாடுகளும், இடம்பெறக் கூடிய தவறுகளும் தேசிய பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் அந்தத் தகவல் கட்டமைப்பில் சேமிக்கப்பட்டிருந்த தகவல்கள் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் அழிக்கப்பட்டமை தொடர்பிலான உண்மையான விபரங்களை வெளிப்படுத்திய மனுஷ நாணயக்கார இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருக்கின்றார். இருப்பினும் உண்மையைப் பேசுபவர்களை இவ்வாறு விசாரணைக்குட்படுத்துவது தற்போதைய அரசாங்கத்திற்குப் புதிய விடயமல்ல.

தகவல்களை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுகின்ற பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கூட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளும் இந்த அரசாங்கம் ஏனையவர்களை எவ்வாறு நடத்தும் என்பதை நாம் கூறத் தேவையில்லை.

எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட எமது சகோதர பாராளுமன்ற உறுப்பினருக்கு நாம் எப்போதும் ஆதரவை வழங்குவோம்.

நாட்டு மக்களை ஏமாற்றுதல், வாக்குறுதிகளை மீறுதல், மூட நம்பிக்கையைப் பிரசாரம் செய்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

'தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தகவல் கட்டமைப்பிலிருந்து தகவல்கள் அழிக்கப்பட்ட விவகாரம் மருந்துப் பொருள் மாஃபியாவுடன் தொடர்புடைய சூழ்ச்சிகரமான நடவடிக்கையாகும்' என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியைப் பயன்படுத்தி சூழ்ச்சிகரமான முறையில் அதிக இலாபமுழைக்க முற்படுபவர்களைக் கண்டறிவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று நம்புகின்றோம்.

அதுமாத்திரமன்றி இந்த தொற்றுப் பரவல் நெருக்கடியைப் பயன்படுத்தி இடம்பெற்று வரும் 'வர்த்தகத்தை' இல்லாதொழிப்பதே எமது கட்சியின் நோக்கம் என்பதுடன் அதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று உறுதியளித்தார்.

அதேவேளை மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்று தகவல் வெளியானமை மற்றும் அவை எவ்வித அடிப்படைகளுமற்ற தகவல்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் மறுத்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சஜித் பிரேமதாஸ,

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதியளித்த வீரர்கள் அல்லவா தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்? அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார்கள். பிறிதொரு வேளையில், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவாறான சந்தேகத்திற்கிடமான விடயங்கள் நடைபெறுவதாகக் கூறுகின்றார்கள். எனவே இவை தொடர்பில் உண்மையான விபரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

மீண்டுமொரு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறக் கூடும் என்று சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கிடைத்திருந்தால், அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அவர்களையும் பங்காளிகளாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதே அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டிய காரியமாகும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment