நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துகின்ற ஊடகவியலாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துகின்ற ஊடகவியலாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் - மனுஷ நாணயக்கார

முன்னர் குற்றமிழைத்தவர்களும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுமே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால் இப்போது நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துகின்ற ஊடகவியலாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கு அழைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தகவல் கட்டமைப்பிலிருந்து தகவல்கள் அழிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் ஓரங்கமாக அது குறித்து வாக்கு மூலம் அளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றிருந்த நிலையில், அங்கு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், யாருடைய தேவையின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று தெரியவில்லை. நாட்டிலுள்ள பெருவணிகர்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகள் வெளிப்படாமல் இருப்பதற்காக, அவர்களது தேவைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகமும் எமக்கு உள்ளது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தகவல்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். ஆனால் அதுபற்றிய விபரங்களை வெளிப்படுத்திய எம்மைதான் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து விசாரணை செய்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் நலனுக்காக எந்தவொரு விசாரணைகளுக்கும் சென்று உரியவாறு பதிலளிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment