யுத்த கால சம்பவங்களை சுட்டிக்காட்டி சில புலம்பெயர் அமைப்பினர் பிழைப்பு : ஐந்து வருட கால நல்லாட்சியில் மட்டும் அமைதியாக இருந்ததன் மர்மம் என்ன? : மார்ச், செப்டெம்பர் மாதங்களில் இவர்கள் தமிழ் மக்களை தூண்டிவிடுவது வழமையாகிவிட்டது - News View

Breaking

Saturday, September 18, 2021

யுத்த கால சம்பவங்களை சுட்டிக்காட்டி சில புலம்பெயர் அமைப்பினர் பிழைப்பு : ஐந்து வருட கால நல்லாட்சியில் மட்டும் அமைதியாக இருந்ததன் மர்மம் என்ன? : மார்ச், செப்டெம்பர் மாதங்களில் இவர்கள் தமிழ் மக்களை தூண்டிவிடுவது வழமையாகிவிட்டது

யுத்தம் நிறைவடைந்து 13 வருட காலம் கடந்த நிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கின்ற ஒரு சில தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்னமும் அது தொடர்பான வாதங்களை நடத்தி காலத்தை வீணடிப்பது தேவையற்றதொரு செயல்பாடு என புலம்பெயர் சமூகத்தைச் சார்ந்த மற்றும் உள்நாட்டு பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 13 வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூடுகின்ற மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் கோஷங்களை எழுப்புவதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில அப்பாவி மக்களை தூண்டி விடுவதுமாக சிலர் செயற்பட்டு வருகின்றமையை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் தாம் எத்தகைய முயற்சியை மேற்கொண்டாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை என்பதை இனியாவது உணர்ந்து செயற்பட வேண்டும்.

அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முன்வந்த போதும் இவர்கள் தமது சுயலாபங்களுக்காக ஆர்ப்பாட்டம், கோஷங்களை தொடர்ச்சியாக எழுப்பி அவற்றை தடுத்து வருகின்றனர். இவர்களின் இந்த தேவையற்ற நடவடிக்கைகளால் இலங்கையில் அமைதியாக வாழ விரும்பும் தமிழ் மக்கள் பாதிப்படைகின்றார்கள்.

அத்துடன அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி முயற்சிகளுக்கும் இவை தடையாக உள்ளது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் வடக்கில் பல்வேறு அபிவிருத்திகளை செய்து வருகின்றது. 25, 30 வருடங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்த வட பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று தினமும் நடைபெறுகிறது.

கடந்த ஐந்து வருட கால நல்லாட்சியில் மட்டுமே வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் தடைபட்டு இருந்தது. இப்போது கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் மீண்டும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனை தேவையற்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்ற புலம்பெயர் சமூகம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக உண்மையான அக்கறை கொண்டிருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் அதனைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் மரணங்களையும் கூறி கூறி பிச்சைக்காரன் காலிலுள்ள புண்ணை போன்று அதனை தமது தேவைகளுக்காக புலம்பெயர் சமூகத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். உண்மை நிலைமை அதுவே. இதனை சகல தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

www.vaaramanjari.lk

No comments:

Post a Comment