மக்களை குடிநீருடன் இணைப்பதே "மணிக்கு மணி வீட்டுக்கு வீடு" குடிநீர் திட்டத்தின் இலக்காகும் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

மக்களை குடிநீருடன் இணைப்பதே "மணிக்கு மணி வீட்டுக்கு வீடு" குடிநீர் திட்டத்தின் இலக்காகும் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அமீன் எம் ரிலான்  

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் பாரிய திட்டம் தேசிய கொள்கையாக இருந்தாலும் இதற்காக அமைச்சு, நிறுவனங்கள், உள்நாட்டு வெளிநாட்டு வளங்கள், நவீன தொழில்நுட்பம் என்பன காணப்பட்டாலும் மக்களின் பங்கேற்பு, மக்களின் தேவை மற்றும் ஊக்கம் இல்லை என்றால் எந்தவித வெற்றியும் அளிக்கப் போவதில்லை எனவும், அதனால் 2025 அனைவருக்கும் குடிநீர் எனும் இந்த பாரிய திட்டத்தை வெற்றி அடையச் செய்வதற்கு மக்களை குடிநீருடன் இணைக்கும் பணி இன்று இடம்பெற்றதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

"மணிக்கு மணி வீட்டுக்கு வீடு" நீர் இணைப்பு - 24 மணி நேர புதிய நீர் இணைப்புகளை வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கட்டான பகுதிகளில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் 2025 இல் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் பாரிய வேலைத் திட்டத்தை நாடு பூராகவும் செயற்படுத்த பல்வேறுபட்ட முறைமைகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதே எமது இலக்காகும் என்பதால் இதனை திட்டமிட்ட அடிப்படையில் அடைய வேண்டும்.

மக்களின் தேவை மற்றும் அதிக கேள்வியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் சமூகத்தின் பங்களிப்புடன் குடிநீர் குழாய்களை பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பின்னர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடமிருந்து நீர் விநியோக விண்ணப்பப் படிவத்தை பெற்று அந்த சந்தர்ப்பத்திலேயே மதிப்பீடுகளை மேற்கொண்டு உரிய தொகையை பெற்றுக்கொண்ட பின்னர் அன்றைய தினமே நீர் இணைப்பை வழங்குவது என்பது ஒரு பாரிய தேசிய செயல்முறை ஆகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அனைவருக்கும் குடிநீரை வழங்கும் செயற்பாடு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதான திட்டத்தின் ஊடாகவும், சிறிய மற்றும் நடுத்தர நீர் இணைப்புக்களை வழங்குவதன் மூலமும் படிப்படியாக வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. இதற்கு மேலதிகமாக, எமது பிரஜைகள் நீர் திணைக்களம் ஊடாகவும் கிராமிய மட்டத்திலான சிறிய நீர் திட்டங்கள், கிராமங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் நீர் திட்டங்கள், எமது இலக்கின் 25 வீதத்துக்கும் அண்மித்ததாக காணப்படுகின்றன. மேலும் கிராமங்களில் காணப்படுகின்ற கிணறுகள் ஊடாக, குழாய்க் கிணறுகள் ஊடாக மற்றும் சிறிய நீரூற்றுக்கள் ஊடாக எமது கிராமிய மக்கள் குடிநீரை பெற்றுக் கொள்கின்றனர். அதற்கமைய சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "2025 இல் அனைவருக்கும் குடிநீர்" எனும் கருத்திட்டத்தை இதன் மூலம் யதார்த்தமாக ஆக்கிக்கொள்ள முடியுமென தான் நம்புவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மணிக்கு மணி வீட்டுக்கு வீடு நீர் இணைப்பு வழங்கும் எதிர்கால வேலைத்திட்டங்கள் கேகாலை, கலிகமுவ, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பர்னாந்துபுல்லே, கட்டான பிரதேசசபை தலைவர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க, பிரதி பொது முகாமையாளர் என்.யு.கே. ரணதுங்க, அமைச்சரின் ஊடக செயலாளர் சஞ்சீவ தம்மிக ஆகியோர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment