எமது நாட்டில் மனித உரிமைகள் எந்த அளவில் இருக்கின்றது எனும் கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு வெளிப்படுத்துகின்றது - சிறிநேசன் - News View

Breaking

Saturday, September 18, 2021

எமது நாட்டில் மனித உரிமைகள் எந்த அளவில் இருக்கின்றது எனும் கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு வெளிப்படுத்துகின்றது - சிறிநேசன்

கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கின்ற இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் கைதிகளிடம் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சம்பவத்தை பார்க்கும் போது பொறுப்புள்ள ஒருவரிடம் இந்த அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டிருக்கின்றதா எனும் கேள்வி மக்களிடம் எழுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் வைத்து இன்று (18.09.2021) சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், அரசின் பாதுகாப்பில் இருக்கின்ற கைதிகள் இவ்வாறு போதையில் சென்றதாக கூறப்படும் இராஜாங்க அமைச்சரால் மண்டியிடச் செய்யப்பட்டது மாத்திரமல்லாது அவர்கள் கைத் துப்பாக்கி மூலமாக அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இதைப்பார்க்கும்போது அந்த சிறையில் ஒரு நிருவாகம் இருந்திருக்கின்றதா, அந்த நிருவாகம் முறையாக செயற்பட்டிருக்கின்றதா, அல்லது அவர்கள் அதற்கு அனுமதியளித்தார்களா அல்லது அவர்களையும் கடந்து சென்றிருக்கின்றார்களா எனும் கேள்விகள் எழுகின்றது.

எமது நாடு ஒரு ஜனநாயக நாடு என பேசப்படுகின்றது, நாட்டில் சட்டவாட்சி இருப்பதாக சொல்லப்படுகின்றது, மனித உரிமைகள் பேணப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது, அத்துடன் எல்லா மக்களையும் சமமாக நடாத்துவதாகவும் அரசு வெளியில் சொல்லுகின்றது.

இந்நிலையில், அண்மையில்தான் மனித உரிமைகள் பேரவையின் வாய் மூல அறிக்கை பெறுகின்ற மாநாடு நடந்து முடிந்திருக்கின்றது. சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் கைதிகளை அச்சுறுத்தியமை என்பது எந்த அளவில் எமது நாட்டில் மனித உரிமை நிலவரங்கள் இருக்கின்றது, சட்டவாட்சி எவ்வாறு உள்ளது இந்த நாட்டில் சிறைச்சாலை நிருவாகம் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக உள்ளது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு வெளிப்படுத்துகின்றது.

அமைச்சரின் இந்த நடவடிக்கை மூலம் சிறையில் இருக்கின்ற தமிழ் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கின்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர சொல்கிறார் முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை எடுக்கலாம் என. உண்மையில் முறைப்பாடு செய்வதற்கு கூட அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் அமைச்சர் முறைப்பாடு செய்தால் எவ்வாறு நடந்து கொள்வார் என்கிற கேள்வி எழுகின்றது.

இதேவேளை சிறை கைதிகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளதாகவும், மனித உரிமைகள் அமைப்புக்கள் இதைப் பற்றி சிந்திப்பதாகவும் கூறப்படுகின்றது.

உண்மையிலே அரசு ஜனநாயக வழிகளை சிந்திப்பதாக இருந்தால் நிச்சயமாக இதற்கான நடவடிக்கையை வெளிப்படை தன்மையாக மேற்கொள்ள வேண்டும். கடந்த 1983 காலப்பகுதியில் 52 தமிழ் அரசியல் கைதிகளை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு நீதி கிடைத்ததா என்று பார்க்கும்போது அதுவும் இல்லை.

இவ்வாறு பல படுகொலைகள், அராஜகங்களுக்கு நீதி கிடைக்காததால் மீண்டும் மீண்டும் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதென்றால் குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இப்போது தமிழ் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை, அவர்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற சிறைகளுக்கு மாற்ற வேண்டும். அதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும். எனவும் தெரிவித்தார்.

கேசரி

No comments:

Post a Comment