ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு புதிய அணிக்கான விலை மனுக் கோரல் - News View

Breaking

Wednesday, September 1, 2021

ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு புதிய அணிக்கான விலை மனுக் கோரல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) புதிய அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2000 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) இரண்டு புதிய உரிமையாளர்களுக்கான ஏலங்களை அழைக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்ட பின்னர், பி.சி.சி.ஐ. அலுவலகப் பணியாளர் கிரிக்பஸ்ஸுடம் இருப்பு விலை 2000 கோடி ரூபா என்று உறுதி செய்தனர்.

தற்போது 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில் அணிகளின் எண்ணிக்கையை 2022 ஆம் ஆண்டில் இருந்து 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து புதிய இரு அணிகளுக்கான உரிமத்தை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அழைப்பு விடுத்து டெண்டர் கோரியுள்ளது.

விலை மனுக் கோரல் படிவத்தில் விதிமுறைகள், நிபந்தனைகள் போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன. ஆண்டுக்கு குறைந்தது 3 ஆயிரம் கோடி இந்திய ரூபா வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களே விண்ணப்பிக்க முடியும்.

மூன்று நிறுவனங்கள் இணைந்து ஒரே பெயரில் அணியை வாங்க விண்ணப்பிக்கலாம். ஆனால் 3 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து கூட்டாக அணியை வாங்கும் முயற்சிக்கு அனுமதி இல்லை.

விலை மனுக் கோரல் விண்ணப்பத்தை அக்டோபர் 5 ஆம் திகதி வரை வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை 10 இலட்சம் ரூபாவாகும். இந்த தொகை திருப்பி தரப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளை விற்பதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அணியின் அடிப்படை விலையே 2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஆமதாபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

அதானி குழுமம், ஆர்.பி.ஜி. சஞ்ஜீவ் கோயங்கா குழுமம், மருந்து நிறுவனமான டோரென்ட் உள்ளிட்டவை ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

10 அணிகள் இடம்பெறும் போது ஆட்டங்களின் எண்ணிக்கை 60 இல் இருந்து 74 ஆக அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment