அதிகாரமிக்க அமைச்சராக இருந்து குறுகிய காலத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த ஒரு அமைச்சர் அலி சப்ரியே : முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

அதிகாரமிக்க அமைச்சராக இருந்து குறுகிய காலத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த ஒரு அமைச்சர் அலி சப்ரியே : முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு

மாளிகைக்காடு நிருபர்

அன்று கொலைகாரர்களுக்காகவும், போதைப் பொருள் வியாபாரிகளுக்காகவும், பாதாள உலக தலைவர்களுக்காகவும் வாதிட்டு ஹராம் ஹலால் பாராது வருமானத்தை ஈட்டி வந்த அலி சப்ரி கடந்த ஒரு வருடமாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் இருக்கிறார் என்ற பெயரை உலகத்திற்கு காட்டிக் கொண்டு இலங்கை முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்கள் ஏராளம் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி ஐ.எம். முகம்மட் மிப்லால் குற்றம் சாட்டியுள்ளார்.

சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் இஸ்லாமிய இயக்கங்களை பொய்க் குற்றச்சாட்டின் பெயரில் தடை செய்தது, அமைச்சர் அலி சப்ரி தனக்கு விருப்பமில்லை என்பதற்காக புர்கா மற்றும் நிகாபை தடை செய்தது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகளுக்கு எதிராக பொய்யான குற்றப்பத்திரிகை சமர்ப்பித்து அவர்களை பயங்கரவாதிகளாக்கியது, முஸ்லிம் தனியார் சட்டத்தை குர்ஆன், ஹதீசுக்கு முரணாக மறுசீரமைப்புக்கு சிபாரிசு செய்தது, 16 வயதிற்கு உட்பட்டவர்கள் மதரஸாக்களுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற சட்டத்தை அமைச்சரவையில் முன்மொழிந்தது என பல்வேறு செயற்பாடுகளை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அவர் செய்துள்ளார்.

அத்துடன் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர் பதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் அதனை அவருக்கு கொடுக்காமல் ஜனாதிபதி ஊடாக தடை செய்ததும் அலி சப்ரியே. 

அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றம் சென்றது மற்றும் அமைச்சர் ஆனது முஸ்லிம்களது வாக்குகளால் அல்ல. ஆனால் முஸ்லிம்களுக்கு அவரூடாக நன்மைகள், நலவுகள் எதுவும் நடக்கும் என்பதை நாம் எதிர்பார்க்கவும் இல்லை அவர் அவ்வாறு செய்யவும் மாட்டார். ஆனால் தயவு செய்து முஸ்லிம்களுக்கு எதிரான, இஸ்லாத்திற்கு எதிரான சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதையும் அதற்கு ஆதரவளிப்பதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். 

மேலும் இன்னும் பல சதிகளுடனும், திட்டங்களுடனும் இஸ்லாத்திற்கு எதிரான ஐரோப்பிய நிறுவனங்களின் யூரோவிற்கும், டொலருக்கும் அடிமையாகி இதுபோன்ற அநியாயங்களை செய்து கொண்டிருக்கும் அலி சப்ரியை நாங்கள் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment