அம்பாந்தோட்டைக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டதையடுத்தே வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம பதவி விலகினார் - ராஜித சேனாரத்ன - News View

Breaking

Friday, September 10, 2021

அம்பாந்தோட்டைக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டதையடுத்தே வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம பதவி விலகினார் - ராஜித சேனாரத்ன

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 தொழினுட்ப குழுவின் ஆலோசனைக்கு புறம்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம கொவிட்-19 தொழினுட்ப குழுவில் இருந்து விலகியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் நடவடிக்கை முறையற்றதாக காணப்படுகிறது. இதுவும் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏதுவான காரணியாக உள்ளது. குழு பேச்சுவார்த்தையின் போது இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இறுதியில் இத்தீர்மானங்களுக்கு பதிலாக பிற தீர்மானங்கள் அரசியல் காரணிகளை கொண்டு முன்வைக்கப்பட்டன.

தொழினுட்ப குழுவில் வைத்தியர்களின் ஆலோசனை புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்குமாயின் அதனை திருத்திக் கொள்வதற்கு விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம எடுத்த தீர்மானம் ஒரு காரணியாக இருக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு உள்ள 20 தொடக்கம் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு கடந்த வாரம் பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டன. இது முறையற்றது என வைத்தியர்கள் குறிப்பிட்ட ஆலோசனை கவனத்திற்கொள்ளப்படவில்லை. இதுவே விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம கொவிட் தொழினுட்ப குழுவில் இருந்து விலகுவதற்கு பிரதான காரணம்.

சுகாதார தரப்பினரது யோசனைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமைளித்தால் மாத்திரமே கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். அரசியல் நோக்கங்களை தவித்து பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களின் பிரதிபலனை நடுத்தர மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment