ஆசிரியர், அதிபர் போராட்டத்திற்கு நியாயமான தீர்வொன்றை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் : மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 19, 2021

ஆசிரியர், அதிபர் போராட்டத்திற்கு நியாயமான தீர்வொன்றை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் : மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் சஜித்

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு முன்னெடுக்கின்ற போராட்டத்திற்கு நியாயமான தீர்வொன்றை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்தோடு இவற்றின் ஊடாக நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்வித் துறையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உள்ள தயக்கதினால் மாணவர்களின் கல்வியை வீணடிக்கின்ற வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளது.

நாம் அனைவரும் அறிந்த வகையில் இலங்கையின் கல்வித் துறையில் தற்போதைய கால கட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவானது கல்வி வரலாற்றில் ஒரு இருண்ட யுகமாகவே கருதப்பட வேண்டும்.

நாட்டை நிர்வாகம் செய்கின்ற அரசாங்கத்திற்கும் அதன் முகவர்களுக்கும் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து இலங்கை நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையே தோன்றுகின்றது.

கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ள துரதிஸ்டவசமான நிலையை நோக்குகின்ற போது நிகழ்கால மற்றும் எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அறிந்து கொள்ளாமையும் அது தொடர்பான ஒழுங்கான புரிதல் இல்லாமையும் மிகவும் அருவருக்கத்தக்க விடயமாகும்.

அரசாங்கத்தின் குறுகிய பார்வையின் காரணமாக பல தசாப்தங்களாக வறிய குழந்தைகள் பெற்று வந்த இலவசக் கல்வி வரப்பிசாதத்தில் இருந்து அந்தப் பிள்ளைகளை ஓரங்கட்டி இருப்பதோடு சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கராவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வித் திட்டம் மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் இலவசக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வழங்குதல், போசாக்கான உணவு வழங்குதல், பெற்றோர் வளர்ப்பு பராமரிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் ஊடாக பாதுகாக்கப்பட்ட இலவசக் கல்வி இன்று பொதுமக்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இல்லாமல் செய்யப்பட்டிருப்பது மிகவும் துன்பகரமான ஒரு விடயமாகும்.

இந்த நாட்டில் உள்ள பாடசாலை ஆசிரியர்களும், அதிபர்களும் நீண்ட காலமாக எதிர்நோக்கிய சம்பள நிலுவை பிரச்சினைக்கு தீர்வு தரக்கோரி சுமார் இரண்டு மாதங்களுக்கும் அதிகமான காலம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொவிட் தொற்று பெருவாரரியாக பரவிக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் கல்வித் துறையில் ஏற்பட்ட சிக்லை தீர்ப்பதற்கு அரசாங்கம் தவிறியிருந்தாலும் தமது சம்பளப் பணத்தை செலவு செய்து ஆசிரியர்களும், அதிபர்களும் இணைய ரீதியிலான கல்வியை முன்னெடுத்தார்கள். ஆனால் இன்றைய நிலையில் எமது நாட்டு மாணவர்களுக்கு அந்த நிலையைக்கூட இல்லாமல் செய்திருக்கின்றார்கள்.

சம்பள நிலுவைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்தவொரு தேவையும் இல்லாதது போன்று புலப்பட்டாலும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்காமல் அதற்காக குழுக்களை அமைத்துக் கொண்டு வெறுமனே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலை குறித்து உடனடியாக கவனம் செலுத்தி தற்போது காணப்படுகின்ற சம்பள முரண்பாடு குறித்து நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக தீர்வுத் திட்டங்களை வழங்கி பாடசாலை மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நாற்பத்து முன்று இலட்சத்திற்கு அதிகமான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சுமார் ஒன்றரை வருடத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதோடு சம்பள முரண்பாட்டு சிக்கல் மற்றும் அதனைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை காரணமாக கடந்த இரண்டரை மாத காலமாக மாணவர்களுக்கு இணைய வழியிலான கற்றல் செயற்பாடுகளும் கிடைக்கவில்லை.

பல்கலைக்கழகங்கள், அரச கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளன. முறையாக கல்வி கிடைக்காமையால் பாடசாலை மாணவர்களும் உயர் கல்வி கற்கின்ற இளைஞர் யுவதிகளும் இன்று பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அதே போன்று மாணவர்களின் பெற்றோர்களும் பெருமளவில் மனஉளைச்சலுக்கும் விரக்கிக்கும் உள்ளாகியுள்ளனர்.

கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுகள் காரணமாக மாணவர்களின் தனிப்பட்ட அறிவு மற்றும் உடலியல் ரீதியான வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் பாரியளவு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தெளிவான விடயம்.

இவவாறான சூழ்நிலையில் கல்வித்துறை எதிர்நோக்கியுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம்; பொறுப்புடன் செயற்படாமை காரணமாக மாணவர்களுக்காக கல்வி உரிமையை இல்லாது செய்வது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் அது அருவருக்கத்தக்க செயற்பாடாக காண்பதோடு ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு முன்னெடுக்கின்ற போராட்டத்திற்கு நியாயமான தீர்வொன்றை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அத்தோடு இவற்றின் ஊடாக எமது நாட்டு குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருத்தமாக கொவிட் தடுப்பூசியை வழங்கி, ஒன்றரை வருட காலமாக மூடிவைக்கப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை திறக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு இதுவரை இல்லாது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பெற்றுக் கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வேண்டுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment