அரசாங்கத்திடம் பணம் இருப்பதாலே வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடிகிறது : சஜித்தின் வார்த்தைகள் வெறும் அரசியல் மாத்திரமே, அதில் எந்த உள்ளடக்கமும் இல்லை - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - News View

Breaking

Saturday, September 18, 2021

அரசாங்கத்திடம் பணம் இருப்பதாலே வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடிகிறது : சஜித்தின் வார்த்தைகள் வெறும் அரசியல் மாத்திரமே, அதில் எந்த உள்ளடக்கமும் இல்லை - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கு கொள்கை பிரகடனத்தின் படி வீதிகளின் இருபுறமும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் இப்போது அதை இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளோம். ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் வீதியின் இருபுறமும் மரம் நடும் பசுமை கருத்திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மர நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாமன்கடை வீதியின் இருபுறமும் மரங்களை நடும் பணி இன்று ஆரம்பித்துள்ளோம். சிலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புவதில்லை. கண்டும் காணாதது போன்று இருப்பர். இதுதான் நம் நாட்டில் உள்ள எதிக்கட்சியாகும்.

லங்காகம வீதி அமைக்கப்படும்போது சிங்கராஜாவில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காடழிப்பு இடம்பெறுகிறதா என்று காண ஜனாதிபதி லங்காகமவுக்கு நேரில் சென்றார். இன்று அந்த வீதியின் வேலை முடிந்துவிட்டது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த முடிவையும் எங்கள் அரசு எடுக்காது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த அபிவிருத்திப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனால் இன்று எதிர்க்கட்சிகள் கூறியவை அனைத்தும் முற்றிலும் பொய்யாகிவிட்டன. அவ்வப்போது ஏதாவது கருத்தை உருவாக்குவது தான் எதிர்க்கட்சிகளின் முக்கிய பங்காக இருக்கிறது.

தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். 

தேர்தல் ஒன்ற நடந்தால் எதிர்க்கட்சித் தலைவரின் நிலையை நன்றாக அறிந்து கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று சவால் விடுத்த தலைவர்தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, அது எங்கள் அரசுக்கு நல்லது. எனவே, சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவும் தற்போதைய அரசாங்கம் ஆட்சியிலும் இருக்கும் வரை நம் நாட்டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, சஜித் பிரேமதாச சொல்பவை வெறும் அரசியல் வார்த்தைகள் மாத்திரமே. அந்த வார்த்தைகளின் அர்த்தத்தில் எந்த உள்ளடக்கமும் இல்லை.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தூக்கு மேடைக்கு விஜயம் செய்த சம்பவம் மற்றும் அவரது ராஜினாமா குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

சிறைத்துறை அமைச்சர் என்ற வகையில் தூக்கு மேடையைப் பார்க்கச் செல்ல அவருக்கு உரிமை உள்ளது என்று நினைக்கிறேன். ஒரு அமைச்சர், இவ்வாறு இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்பதே மிகவும் சரியானது. உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வாறு நடந்துள்ளது. தவறு நடந்தால் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ராஜினாமா செய்வார்கள். இங்குள்ளவர்கள் இராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று அப்போது கூறப்பட்டது. இப்போது அவர் இராஜினாமா செய்யும்போது சட்டத்தை இன்னும் கடுமையாகச் செயல்படுத்த வேண்டுமாம். அமைச்சர் லொஹான் ரத்வத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். அவர் தவறு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனால், அவர் இராஜினாமா செய்தார். இது மிகவும் நல்ல விஷயம். அன்று மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் இராஜினாமா செய்யவில்லை. சஜித் பிரேமதாச பல பில்லியன்களை திருடியதற்காக அவர் இராஜினாமா செய்தாரா? அவரது அமைச்சு ஊழியர்கள் அவரின் மனைவியின் சிகை அலங்கார நிலையத்தில் வேலை செய்ததற்காக குறைந்தபட்சம் அவர் மன்னிப்பு கேட்டாரா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் இது போன்ற ஒன்று நடந்தது நல்ல விஷயம். இது கட்டுக்கோப்பான அரசாகும்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்ந்து இரத்தினக்கல் மற்று ஆபரண கைத்தொழில் அமைச்சராக தொடந்து இருக்கிறார். அவர் குற்றவியல் குற்றச்சாட்டு உள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். 

முதலில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணை தேவை. அது தொடர்பாக ஒரேயடியாக கூற முடியாது. அவர் இராஜினாமா செய்யாமல் ஜனாதிபதியும் இராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்? தற்போது இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது, அந்த விசாரணை அறிக்கை வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். விசாரணை அறிக்கைக்கு முன் நான் ஒரு கருத்தை தெரிவித்தால் அது தவறு. நான் அங்கு இருக்கவில்லை. எனவே அப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்ததா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் இராஜினாமா செய்துள்ளார், இது ஒரு நல்ல விஷயம். இந்தப் போக்கு நல்லது என்று தான் நான் கருதுகிறேன்.

நமது நாட்டிற்கு எதிராக மனித உரிமை தொடர்பான பிரச்சனையொன்று இருக்கும் சமயத்தில் லொஹான் ரத்வத்தையின் இந்த செயற்பாடு எப்படி எமது நாட்டை பாதிக்கும் என ஒரு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

மனித உரிமைகள் பிரச்சினைகள் இன்று நேற்று வந்ததல்ல. இந்த நாட்டில் எப்போதும் இருந்து வரும் விடயம் அது. பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து இந்த மனித உரிமை பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் முகங்கொடுத்து வருகிறது. அது ஒன்றும் புதிதல்ல. இப்போது இந்தப் பிரச்சினையும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நாங்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம்.

கடந்த தேர்தலில் வெற்றிபெற ஈஸ்டர் தாக்குதல் உங்களுக்கு உதவியாக அமைந்ததாக கூறப்படுகிறது. . இதேபோன்ற தாக்குதல் மீண்டும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதல்லவா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

அது அப்பட்டமான பொய்யாகும். எங்கள் அரசு தேசிய பாதுகாப்பை எதற்காகவும் விட்டுக் கொடுக்காது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. யார் என்ன செய்ய திட்டம் தீட்டினாலும் முயற்சித்தாலும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது, எங்களை விட முன்னேற்றமடைந்த நாடான நியூசிலாந்தில் என்ன நடந்தது. இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தைப் போல், நமது அரசும் தேசிய பாதுகாப்பை பலிக்கடாவாக்க ஒரு போதும் தயாராக இல்லை. தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நான் அதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
உங்கள் அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தாலும் இன்னும் மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.

இந்த ஒன்றரை ஆண்டுகளில், முழு உலகமும் கோவிட் பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளது. பிரச்சினை வந்த போது, நாங்கள் மக்களுக்கு நிதி உதவி வழங்கினோம். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. சமுர்த்தி பெறுபவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகிறோம். இந்த அரசாங்கம் மக்களையும் பாதுகாத்து இந்தளவிலாவது பொருளாதாரத்தைம் பாதுகாப்பது பற்றி நாட்டு மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும், இன்று நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இந்த நாடு ஒரு கல்லறையாக மாறியிருக்கும். அபிவிருத்தி அடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்த, மக்களை வீணாக இறக்க அனுமதித்த அரசாங்கமொன்றே கடந்த காலத்தில் இருந்தது. எதிர்க்கட்சி பல்வேறு விடயங்களை கூறுகின்றது. ஆனால் எங்கள் அரசாங்கம் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் . இந்தப் பேரழிவில் இருந்து தப்பிக்க தேவையான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். தடுப்பூசியின் ஏற்றுவதில் உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக எமது நாடு மாறியுள்ளது.எங்களிடம் குறைபாடுகள் இருந்திருக்கலாம். இத்தகைய பேரழிவு எமது நாட்டிற்கு புதியது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சியடையும் என்பதை நாம் நாட்டு மக்களிடம் கூறுகிறோம்.எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும், எங்களிடம் அவற்றுக்கு தீர்வு உள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

அஜித் நிவார்ட் கப்ரால் திறமைசாலி. அவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்காகஅவர் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர் அல்ல என்று அர்த்தமாகாது. அவர் பாராளுமன்றத்திற்கும் மத்திய வங்கிக்கும் பொருத்தமானவர். அதாவது இந்த நேரத்தில் அஜித் நிவார்ட் கப்ரால் போன்ற ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பதே உகந்தது.அதனால் தான் சஜித் பிரேமதாஸாவும் ஹர்ஷாவும் இணைந்து அவரைத் தாக்குகிறார்கள். இதுதான் யதார்த்தம்.அவர்களுக்கு எதிராகவும் குற்றச் சாட்டுகள் உள்ளன. யார் மீது தான் குற்றச்சாட்டு இல்லை.என் மீது பதினொரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டுவதும் சேறு பூசுவதும் எளிது. யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். தகுதியற்றவர்கள் தான் மத்திய வங்கியின் ஆளுநராக யார் வர வேண்டும் என்று கருத்துக் கூறுகிறார்கள்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கையின் குடியுரிமையை கூட இல்லாத ஓருவரே மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர்கள் தான் இன்று மத்திய வங்கியின் ஆளுநராக யார் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இது நகைப்புக்குறிய விடயமாகும். எமது நாடு இந்த சவால்களை வெல்லும் என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம். ஜனாதிபதி கோட்டாபய மிகச்சிறந்த ஆட்சியாளர். முதிர்ந்த பிரதமரான மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்கண்டு வருகிறோம்.

துறைமுகம் போன்ற தேசிய வளங்களை மறுவிற்பனை செய்வதாக அரசு மீது குற்றம் சாட்டப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எந்த தேசிய வளமும் விற்கப்படவில்லை. அது அப்பட்டமான பொய். நான் துறைமுக அமைச்சராகவும் இருந்தேன். அது ஒரு முதலீடு மாத்திரமே. முதலீட்டாளர்கள் இந்த நாட்டிற்கு வர வேண்டும். அவ்வாறின்றி ஒரு நாட்டை எப்படி முன்னேற்ற முடியும். முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்யும் போது அவர்களுக்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்வதாக கூறுகிறார்கள். எதையாவது சொல்லத்தான் பார்க்கிறார்கள். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். கோவிட் பிரச்சனை இருப்பதால் அவர்கள் கொஞ்சம் ஆட்டம் போடுகிறார்கள். கோவிட் பிரச்சினை தீர்ந்த பின்னர் அவர்களின் அரசியல் அழிந்து விடும்.

ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் கூறுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நானொன்றும் மருத்துவர் கிடையாது. ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பில் நான் கருத்துச் சொல்வதில் பயணில்லை. மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று ஜனாதிபதி சரியான முடிவுகளை எடுப்பார். சரியான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

அரசாங்கத்திற்கு தற்பொழுது பணப் பிரச்சினை இருக்கிறதா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.
அரசிடம் பணம் இருக்கிறது. பணமில்லாவிட்டால் வீட்டில் இருந்து வேலை செய்யும் அரசாங்க ஊழியரின் சம்பளத்தை எப்படி கொடுக்க முடியும். கடந்த அரசாங்கத்திடம் பணம் இருக்கவில்லை. நாங்கள் வங்குரோத்தடையவில்லை.

நாங்கள் இன்னும் அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்கி வருகிறோம் .எங்களிடம் வீணடிக்க பணம் இல்லை. எமது வருமானம் குறைந்த மட்டத்தில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால், அரசாங்கம் வங்குரோத்தடையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

டபிள்யு.ஏ. சில்வா மாவத்தை முதல் பாமன்கடை பாலம் வரையான வீதியின் இருபுறமும் மரம் நடும் நிகழ்வில் அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தார்.

நெடுஞ்சாலை அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் இருக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இணைப்புத் திட்டத்தின் ஊடாக மரம் நடும் திட்டம் 2021-09-17 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

டபிள்யூ.ஏ சில்வா மாவத்தையில் இருந்து பாமன்கடை பாலம் வரை வீதியின் இருபுறமும் மரங்கள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சமிந்த அதாலுவகே, திட்டப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment