ஜனாதிபதி, பிரதமரின் அனுமதி இல்லாது யாருடைய கட்டளைக்கு மதுபானசாலைகள் திறக்கப்பட்டது : ஆளுந்தரப்பின் ஒரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

ஜனாதிபதி, பிரதமரின் அனுமதி இல்லாது யாருடைய கட்டளைக்கு மதுபானசாலைகள் திறக்கப்பட்டது : ஆளுந்தரப்பின் ஒரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர்

ஆர்.யசி

கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையில் நாட்டின் அத்தியாவசிய சேவைகள் பல முடக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கியது யார்? ஜனாதிபதிக்கும் தெரியாது, பிரதமரும் நாட்டில் இல்லாத நிலையில் அவர்களது அனுமதி இல்லாது யாருடைய கட்டளைக்கு அமைவாக மதுபானசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டது என ஆளுந்தரப்பின் ஒரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டின் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் விதமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரையில் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் மதுவரித் திணைக்களம் தாம் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கத்திற்குள்ளும் இது முரண்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர இது குறித்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமை உள்ளது. அதனை கருத்தில் கொண்டே நீண்ட நாட்களுக்கு நாடு முடக்கப்பட்டு வருகின்றது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதரத்தை கூட பொருட்படுத்தாது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் மதுபானசாலைகளை மாத்திரம் திறக்க யார் அனுமதி வழங்கியது என நாமே கேள்வி எழுப்பியுள்ளோம்.

இது குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில், வைத்திய தரப்பினர் நாட்டை முடக்க வேண்டும் என கூறிக் கொண்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகர் சங்கம் இப்போதே தமது எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் அரசாங்கம் மிகவும் கவனமாக நாட்டின் தற்போதைய நிலைமைகளை கையாள வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.

அவ்வாறு இருக்கையில் மதுபானசாலைகளை யாருடைய அனுமதியில் திறக்க அனுமதி வழங்கப்பட்டது என அரசாங்கத்தில் இருக்கும் எமக்கே தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மதுபானசாலைகள் முன்பாக மக்கள் கூட்டம் கூடியதை அவதானிக்கையில் மிகவும் அதிருப்தியாகவே உள்ளது.

நாட்டை முடக்கி பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளாது இறுக்கமான தீர்மானங்கள் எடுப்பது மக்களின் உயிரை பாதுகாக்கவேயாகும். ஆனால் மக்களுக்கு இது விளங்கவில்லை என்றால் எவ்வாறு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது என்ற கேள்வி எமக்குள்ளேயே எழுந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment