அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர், நிதி மோசடி தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் அஜித் நிவாட் கப்ராலின் நியமனம் மத்திய வங்கியின் நற்பெயருக்கு பாதிப்பு : சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர், நிதி மோசடி தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் அஜித் நிவாட் கப்ராலின் நியமனம் மத்திய வங்கியின் நற்பெயருக்கு பாதிப்பு : சம்பிக்க ரணவக்க

எம்.ஆர்.எம்.வசீம்

அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் மற்றும் நிதி மோசடி தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமித்திருப்பது நாட்டின் மத்திய வங்கியின் நற்பெயருக்கு பாதிப்பாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட் கப்ராலை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அத்துடன் நாட்டின் பாரிய முகாமைத்துவம் செய்யும், கடன் செலுத்தும் அரச கடன் திணைக்களத்தை இயக்கும் இடம் மத்திய வங்கியாகும். அதேபோன்று நாட்டின் பாரிய இரண்டு நிதியங்களான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன நிர்வகிகப்படுவதும் மத்திய வங்கியினாலாகும்.

அதனால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் அல்லாத சுயாதீன, முழு உலகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தொழில் அனுபவம் உள்ளவர் வகிப்பது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இலங்கை பிரச்சினைக்கு ஆளாகி இருந்த சந்தர்ப்பத்தில் இந்திரஜித் குமாரசுவாமி என்ற நன்மதிப்பு மிக்க பொருளாதார நிபுணரால், அர்ஜுன் மகேந்திரனால் வீழ்த்தப்பட்டிருந்த மத்திய வங்கியின் நற்பெயரை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் இந்த இடத்துக்கு தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் அஜித் நிவாட் கப்ரால், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் என்பது தெளிவானது. அதேபோன்று அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி ஒன்றை வகித்தவர்.

அவ்வாறான ஒருவர் இந்த மத்திய வங்கி ஆளுநராக வந்த பின்னர், மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மை, அதன் ஒழுங்குறுத்தல்கள் தொடர்பாக எந்த நம்பகத் தன்மையும் உலக மக்களுக்கோ தேசிய மட்டத்தில் வர்த்தக சந்தைக்கு ஏற்படப்போவதில்லை.

மேலும் மத்திய வங்கியை இவர் நிர்வகிக்கும் போதுதான், ஆரம்பமாக திறைசேரி பிணைமுறி மோசடி ஆரம்பிக்கப்பட்டது என்பது தடயவியல் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

மேலும் கிரீஸ் பிணைமுறி சம்பவம், ஹெஜின் கொடுக்கல் வாங்கல் மற்றும் சுமேரி என்ற ஐக்கிய அமெரிக்காவின் உளவு பிரிவில் செயற்பட்டு வந்த நபர் ஒருவருக்கு 6.8 டொலர் மில்லியன் கொடுத்தமை போன்ற பாரிய மோசடிகள் தொடர்பில் இவருக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான ஒருவர் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படுவதன் மூலம் அதன் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதென்பது தவிரக்க முடியாததொன்றாகும் என்றார்.

No comments:

Post a Comment