நாடு இன்னமும் சிவப்பு வலயத்திலேயே உள்ளது, சமூகத்தில் 6 ஆயிரம் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கின்றனர் - இலங்கை மருத்துவ சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

நாடு இன்னமும் சிவப்பு வலயத்திலேயே உள்ளது, சமூகத்தில் 6 ஆயிரம் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கின்றனர் - இலங்கை மருத்துவ சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாடு இன்னமும் சிவப்பு வலயத்திலேயே உள்ளது. நாளாந்தம் சுமார் 2000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதன் மூலம் 6000 தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. அதற்கமைய நாடு என்ற ரீதியில் கொவிட் அபாயத்திலிருந்து நாம் இன்னும் மீளவில்லை என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு என்ற ரீதியில் கொவிட் அபாயத்திலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. தற்போதும் நாளாந்தம் சுமார் 2000 இற்கும் அதிக தொற்றாளர் எண்ணிக்கை பதிவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கமைய சமூகத்தில் சுமார் 6000 தொற்றாளர்கள் காணப்படுகின்றார்கள் என்பது தெளிவாகிறது.

அதேபோன்று நாளாந்தம் சுமார் 150 மரணங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது பிரதானமாக பரவிக் கொண்டிருப்பது டெல்டா பிறழ்வு என்பதும் சகலரும் அறிந்த விடயமாகும். இந்த பிறழ்வு கொழும்பிலிருந்து வெளியேறி நாடு முழுவதும் பரவியுள்ளது. இது மிகவும் வேகமாக பரவக் கூடிய பிறழ்வுமாகும்.

இந்த காரணிகள் தொடர்பில் ஆராயும்போது நாடு அபாய நிலைமையிலிருந்து மீண்டுள்ளது என்று கூற முடியாது. நாடு இன்னமும் சிவப்பு வலயத்திலேயே உள்ளது. அதேபோன்று மீண்டுமொரு அலை உருவாகி அதனால் வைத்தியசாலை கட்டமைப்புக்கள் நிரம்பி வழியக் கூடிய நிலைமையையும் நாம் கடக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment