இலங்கை அராங்கம் காலத்தை இழுத்தடிக்க முயற்சி : தகுந்த நடவடிக்கை அவசியம் என ஐ.நா.விடம் சம்பந்தன் எடுத்துரைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 12, 2021

இலங்கை அராங்கம் காலத்தை இழுத்தடிக்க முயற்சி : தகுந்த நடவடிக்கை அவசியம் என ஐ.நா.விடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

ஆர்.ராம்

இலங்கை அராங்கம் பொறுப்புக் கூறல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல், நீதியை நிலைநாட்டில் ஆகியவற்றுக்கான எவ்விதமான நடவடிக்கைகளையும் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்காது செய்கின்றோம், செய்வோம் என்று கூறி காலத்தினை இழுத்தடிப்பதற்கு முயற்சிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையிலும், அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள பதிலளிப்பு அறிக்கை தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. இருப்பினும் தற்போது வரையில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் எவ்விதமான செயற்பாடுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

இவ்விதமான நிலையில்தான், அரசாங்கம் ஐ.நாவுக்கு அனுப்பி யுள்ள பதிலறிக்கையில் பல விடயங்களை செய்வோம், செய்வதற்கு ஆரம்பித்துள்ளோம் என்ற தொனியில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தினால் ஒரு விடயத்தினைக் கூட பூரணமாக செய்து முடித்தோம் என்று கூற முடியாத நிலையில்தான் உள்ளது.

அதேநேரம், ஐ.நா. தீர்மானத்திற்கு அமைவான கருமங்களை முன்னெடுக்கவுள்ளோம், முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம் என்று தொனிப்படும் கருத்தானது, பொறுப்புக் கூறல் மற்றும் நீதியை வழங்கும் செயற்பாட்டினை இதயசுத்தியுடன் முன்னெடுப்பதாக காணப்படவில்லை. வெறுமனே காலத்தினை இழுத்தடிக்கும் ஒரு முயற்சியாகவே உள்ளது.

ஆகவே அரசாங்கத்தின் இவ்விதமான கருத்துக்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரும், உறுப்பு நாடுகளும் தொடர்ந்தும் நம்பிக்கை கொள்ளக்கூடாது. அரசாங்கத்தினை பொறுப்புக் கூறச் செய்வதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைச் செய்து தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு ஆணித்தமனாகவும், அழுத்தமாகவும் அவ்விடயங்களை சர்வதேச சமூகம் வலியுறுத்திக் கூற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது. அத்துடன் இம்முறை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது வாய்மொழி மூலமான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மிகவும் கனதியான விடயங்களை முன்வைப்பார் என்பதும் எதிர்பார்ப்பாகவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment