வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, September 27, 2021

வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ள நிலையில், யாழ் மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மெய்நிகர் வழியூடாக நேற்று நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கடந்த காலங்களில் வட கடல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட வலைகள் சுமார் 3 வருடங்களுக்கு வலைகளைப் பயன்படுத்தக் கூடியதாக இருந்ததாகவும் தற்போது சுமார் 1 வருடம் மாத்திரமே பயன்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் முறையிடுவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக, வட கடல் நிறுவனத்தின் தலைவரை அமைச்சர் தொடர்பு கொண்ட போது, கடந்த ஆட்சியாளர்களினால் தரம் குறைந்த வலைகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய நிறுவனத்தின் தலைவர், தற்போது தரமான வலைகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, மீனவர் ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல், யாழ்.மாவட்டத்தில் தற்காலிகமாக 40 அடிக்கு குறைவான பலநாள் கலன்களுக்கு அனுமதி வழங்குதல், நங்கூரம் இடும் தளங்களை அமைத்து தருமாறு கடற்றொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கை, ஜஸ் பெட்டிகளை கட்றொழிலாளர்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்களை கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு சுதாகரன், கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், இன்னும் சில மாதங்களில் அதுதொடர்பான உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன், புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விசேட அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், நஷ்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனை சுட்டிக்காட்டிய அமைச்சர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் தொடர்பான விபரங்களையும், நங்கூரமிடும் தளங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் தொடர்பான விபரங்களையும் அனுப்பி வைக்குமாறும் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் உறுதியளித்தார்.

அதேபோன்று, அறுவடைக்குப் பின்னர் பழுதடைகின்ற மீன்களின் அளவை கடுப்படுத்தும் வகையில், 45 அடிக்கு மேற்பட்ட பல நாள் கலன்களுக்கு மாத்திரமே தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருவதனை சுட்டிக்காட்டிய அமைச்சர், யாழ். மாவட்டத்திலும் குறித்த நடைமுறையைப் பின்பற்றுமாறும், சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி யாழ்ப்பாணத்தின் நிலைவரங்களின் அடிப்படையில் தீர்மானிப்பதாகவும் உறுதியளித்தார்.

இதன்போது யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நீண்ட காலப் பலனளிக்கும் வகையில் வினைத்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

குறிப்பாக, களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்திற்காக யாழ். மாவட்டதில் அடையாளப்படுத்தப்பட்ட சுமார் 33 திட்டங்களில் 17 திட்டங்களுக்கான சுமார் 260 இலட்சம் ரூபாய் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய அமைச்சர், குறித்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததுடன் ஏனைய 16 திட்டங்களுக்கான நிதியும் விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

சட்ட விரோதத் தொழில்முறைகளை கட்டுப்படுத்துவதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்கக்கூடாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்ட விரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்துவதில் கடற்றொழில் உத்தியோகத்தர்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்ற தன்னுடைய எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment