அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாமலாக்க நடவடிக்கை - ருவன் விஜேவர்த்தன - News View

Breaking

Tuesday, September 14, 2021

அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாமலாக்க நடவடிக்கை - ருவன் விஜேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாணவர்கள் இணைய வழியில் கல்வி கற்பதற்கு அத்தியாவசியமான உபகரணங்களின் விலை அதிகரிக்கச் செய்திருப்பதன் மூலம் அரசாங்கம் இலவசக் கல்வியின் சம உரிமையை இல்லாமலாக்கி இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்திருக்கும் உத்தரவாத தொகை அதிகரிப்பினால் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று நிலைமையில் மாணவர்கள் இணைய வழி கல்வியையே பெற்று வருகின்றனர். இவ்வாறான நிலையில் மாணவர்களுக்கு அத்தியாவசியமான தொலைத் தொடர்பு உபகரணங்களின் விலை அதிகரிக்கச் செய்யும் வகையில் இறக்குமதி விதிமுறைகளை விதிப்பதன் மூலம் இலவச கல்வியின் சம உரிமையை இல்லாமலாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

மேலும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலும் இணைய வழி கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காக பெற்றோர்கள் மிகவும் சிரமத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணணிகளை கொள்வனவு செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் தொலைத் தொடர்பு உபகரணங்களை அத்தியாவசியமற்ற பொருட்களில் உள்ளடக்கி, இறக்குமதி விதிமுறைகளுக்குள் உள்ளடக்கி இருக்கின்றது. அதனால் இந்த பொருட்களின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது நல்லாட்சி அரசாங்க காலத்தில் மாணவர்களுக்கு இலவச டெப் கணணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது, இன்று ஆட்சியில் இருப்பவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலவசக் கல்வியை இல்லாமலாக்கி, வசதி குறைந்த மாணவர்களை தங்களின் கைப்பாகையாக ஆக்கிக் கொள்வதற்கான திட்டமாகவே தெரிய வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad