மருந்து மாபியாக்களின் சூழ்ச்சியாக இருக்கலாம், நிறுவனத்தின் அலட்சியப் போக்கே தரவுகள் அழிக்கப்பட காரணம் - பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிவிப்பு - News View

Breaking

Monday, September 13, 2021

மருந்து மாபியாக்களின் சூழ்ச்சியாக இருக்கலாம், நிறுவனத்தின் அலட்சியப் போக்கே தரவுகள் அழிக்கப்பட காரணம் - பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிவிப்பு

தேசிய மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கணனி தரவு தொகுதி அழிக்கப்பட்டமை மருந்து மாபியாக்களின் சூழ்ச்சியாக இருக்கலாம் என சட்டமா அதிபர் திணைக்களம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தேசிய மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவு தொகுதி அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நேற்றையதினம் கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் நீதிபதி புத்திக்க சீ. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு மேற்கண்டவாறு அறிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கணனி தொகுதி தரவு களஞ்சியத்தை செயற்டுத்தும் பொறுப்பு எபிக் லங்கா என்ற தனியார் நிறுவனத்திற்கு ஐந்து வருட காலத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

எனினும் அந்த நிறுவனம் தமது பொறுப்பை முறையாக மேற்கொள்ள தவறிவிட்டதாக குற்றஞ் சாட்டியுள்ள சொலிசிட்டர் ஜெனரல் மேற்படி நிறுவனத்தின் அலட்சியப் போக்கே தரவுகள் அழிக்கப்பட காரணம் என்றும் தெரிவித்துள்ளார். 

தரவு களஞ்சியத்தை பாதுகாப்பதற்கான எந்தவொரு வேலைத் திட்டத்தையும் அந்த நிறுவனம் கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ள சொலிசிட்டர் ஜெனரல் அந்த தரவுகளின் BACK UP ஒன்றை முன்னெடுப்பதற்கும் அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சில மருந்து நிறுவனங்கள் ஒரே மருந்தை பல்வேறு பெயர்களில் இறக்குமதி செய்வதாக குறிப்பிட்டுள்ள சொலிசிட்டர் ஜெனரல் அந்த மருந்துகள் தொடர்பான தரவுகள் மேற்படி அழிக்கப்பட்ட தரவு தொகுதியிலேயே இடம் பெற்றிருந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

தரவு களஞ்சியம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலைகளை நமக்கு தேவையான அளவில் நிர்ணயிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறைப்பாடு எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அன்றையதினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் தரவு தொகுதியை புதுப்பிப்பதில் நிலவும் சிக்கலை இரு தரப்பினருமே சீர் செய்ய வேண்டும் என்றும் அதில் நீதிமன்றம் தலையிடாது எனவும் தெரிவித்துள்ள நீதவான், தரவுக் கட்டமைப்பு புதுப்பிப்பது தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி விதிக்கப்பட்ட தடை யுத்தரவை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment