53,000 பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் அரச நிறுவனங்களில் தொழில் - ஜனாதிபதியால் 03 அமைச்சர்களுக்கு பொறுப்பு ஒப்படைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

53,000 பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் அரச நிறுவனங்களில் தொழில் - ஜனாதிபதியால் 03 அமைச்சர்களுக்கு பொறுப்பு ஒப்படைப்பு

பயிற்சி பெற்று வரும் 53,000 பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கான பொறுப்பை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த தகவலைத் தெரிவித்தார்.

53,000 பட்டதாரிகளில் 18,000 பட்டதாரிகளை கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருந்த போதும் அதற்கான நடவடிக்கைகள் நிறைவுறாத காரணத்தினால் மேலும் ஆறு மாத காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆறு மாதங்களுக்கு மேல் அதனை நீடிப்பது நீதியானதல்ல என்றும் குறுகிய காலத்தில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அந்த நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், எமது 53,000 இளைஞர் யுவதிகளை அவசியமான அரச நிறுவனங்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். அது விரைவாக நடைபெறுமென நாம் நம்புகின்றோம்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பதாக அரச துறை வேலை வாய்ப்புகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்தபோது பட்டதாரிகளுக்கும் அது பொருந்துமென சில தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிலர் குழப்பமடைந்து என்னிடமும் தொடர்புகொண்டு வினவினர். அவ்வாறில்லையென்று என்னால் உறுதியாக தெரிவிக்க முடிந்தது. இது முழு அமைச்சரவையினதும் பொறுப்பு என்பதை நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

பயிற்சி பெற்று வருபவர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லையென எமக்கு எதுவித முறைப்பாடும் கிடைக்கவில்லையென்பதை குறிப்பிட வேண்டும்.

அது தொடர்பில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் நிலுவை தொகை தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அவ்வாறான பிரச்சினைகள் இருப்பவர்கள் இருந்தால் பொது நிர்வாக அமைச்சுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment