சுமார் ரூ. 220 மில்லியன் (ரூ. 22 கோடி) பெறுமதியான 16 கிலோ கிராம் தங்கத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின், துபாய் நகரிலிருந்து வாகன உதிரிப் பாகங்கள் எனத் தெரிவித்து இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு சில பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தையே சுங்க அதிகாரிகள் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.
விமான பொதிகளை அனுப்பும் நிறுவனம் (கூரியர் சேவை) மூலம் போலியான வர்த்தக பெயரைப் பயன்படுத்தி மேற்கொண்டு வந்த பாரிய தங்கக் கடத்தல் மோசடி நடவடிக்கையை, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் இன்று (27) கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பின் சிறப்பு யாதெனில், குறித்த உதிரிப் பாகங்களின் உள்ளே காணப்படும் பாகங்களை அகற்றி, அதனை நகலாக தங்கத்தால் செய்து, அதில் இணைத்து, சுங்க அதிகாரிகளை திசை திருப்பும் வகையில் குறித்த தங்கக் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
இந்த தங்கத்தின் சந்தை பெறுமதி ரூ. 220 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டவிரோத இறக்குமதி தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை தொடர்பில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்தும் கண்காணித்து வருவதால், சமீபகாலமாக அதிகளவான போதைப்பொருட்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment