அரசாங்கம் கடந்த 20 மாதத்தில் அச்சடித்த பணத் தொகை எவ்வளவு தெரியுமா ? : முழு விபரத்தையும் வெளியிட்டார் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

அரசாங்கம் கடந்த 20 மாதத்தில் அச்சடித்த பணத் தொகை எவ்வளவு தெரியுமா ? : முழு விபரத்தையும் வெளியிட்டார் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன்

(நா.தனுஜா)

அரசாங்கம் கடந்த 20 மாத காலத்திற்குள் 1,25,747 கோடி ரூபா பணத்தை அச்சடித்திருக்கின்றது. இவ்வாறு எவ்வித மட்டுப்பாடுகளுமின்றி பணத்தை அச்சிடுவதானது வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான மிகப்பாரிய நிதி நெருக்கடியை நோக்கி இலங்கை தள்ளப்படுவதற்கு வழிவகுத்திருப்பதாக ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்புக்களிடமிருந்து உதவிகளைப் பெறுவதனைவிடுத்து, நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல், தமக்கு நெருக்கமானவர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு திறைசேரியை வெற்றிடமாக்கல் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் அதளபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ரஜித் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மத்திய வங்கியிடம் காணப்பட்ட திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளின் பெறுமதி 74.74 பில்லியன் ரூபாவாகும். அதன் இன்றைய பெறுமதி 13,332.21 பில்லியன் ரூபாவாகும்.

அதேபோன்று கடந்த 20 மாத காலத்திற்குள் புதிதாக 1,25,747 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரையான காலப்பகுதியில் 4,784 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது. இது மத்தள விமான நிலையத்தின் நிர்மாணத்திற்குச் செலவிடப்பட்ட நிதிக்கு நிகரானதாகும்.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டின் செல்வந்த வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டதன் விளைவாக அரச வருமானம் பெருமளவால் வீழ்ச்சியடைந்ததுடன் பொருளாதாரமும் நெருக்கடிக்குள்ளானது.

செல்வந்த வர்த்தகர்களுக்கான வரிச் சலுகையினால் ஏற்பட்ட வருமான இழப்பின் காரணமாக, கடனை மீளச் செலுத்துவதற்கு நாட்டின் டொலர் கையிருப்பைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பின்னர் டொலர் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இரசாயன உரம், மருந்துப் பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்களின் இறக்குமதிகளை இடைநிறுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அதன் விளைவாகவே இப்போது நாடு முழுவதும் நீண்ட மக்கள் வரிசைகளைக் காணமுடிகின்றது.

உர இறக்குமதி தடை செய்யப்பட்டதன் விளைவாக விவசாய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. அதுமாத்திரமன்றி வரையறுக்கப்பட்ட விவசாய உற்பத்திகள் பணம் மற்றும் அதிகார பலமுடையவர்களினால் கைப்பற்றப்படுகின்றன. அதன் நேரடி விளைவாக 'கறுப்புச் சந்தைகள்' தோற்றம் பெறுகின்றன.

மேற்கூறப்பட்டவாறு வரையறைகளின்றி பணம் அச்சடிக்கப்படுவதை பொருட்களின் விலைகள் அதிகரிப்பதன் ஊடாகப் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு அதிகரிக்கும் பொருட்களின் விலைகளை அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் அறிக்கைகள் மூலமோ அல்லது மேடைப் பேச்சுக்களின் மூலமோ கட்டுப்படுத்திவிட முடியாது.

இந்த தன்னிச்சையான பண அச்சடிப்பின் மிக மோசமான விளைவை எதிர்வரும் இரண்டு மாத காலத்தில் மேலும் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும் என்று ரஜித் கீர்த்தி தென்னகோன் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment