இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேருக்கு கறுப்பு பூஞ்சை : மேற்கத்தேய மருந்துகள் உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் - News View

Breaking

Saturday, September 18, 2021

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேருக்கு கறுப்பு பூஞ்சை : மேற்கத்தேய மருந்துகள் உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

எம்.மனோசித்ரா

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரையில் 12 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகாதோரில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகமாககக் காணப்படும் என்று மருத்துவ ஆய்வு கூடத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார்.

நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படும் சிறுவர்களுக்கு இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும் என்றும் விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மேற்கூறப்பட்ட 12 என்ற எண்ணிக்கை இரசாயன கூடங்களில் உறுதி செய்யப்பட்ட தொகை மாத்திரமேயாகும். எனவே இந்த எண்ணிக்கையில் மிகக் கனிசமானளவு அதிகரிப்பு காணப்படலாம்.

அத்தோடு இதுவரையில் சிறுவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படவில்லை. எனினும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படும் சிறுவர்களுக்கு இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

அண்மையில் கொவிட் தொற்றுக்காக ஏற்படக்கூடிய மேற்கத்தேய மருந்துகள் தொடர்பில் பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறிருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி மேற்கத்தேய மருந்துகள் உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் அண்மையில் கொவிட் தொற்றாளர்களுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோய் பரவல் அதிகமாகக் காணப்பட்டமைக்கான பிரதான காரணம் மேற்கத்தேய மருந்துகள் அதிகளவில் உபயோகிக்கப்பட்டமையாகும் என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment