120000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் திங்கட்கிழமை நாட்டை வந்தடையும், கண்டி மாவட்டத்தில் வழங்குவதற்கு இவை உபயோகிக்கப்படும் - சுகாதார அமைச்சர் கெஹெலிய - News View

Breaking

Wednesday, September 15, 2021

120000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் திங்கட்கிழமை நாட்டை வந்தடையும், கண்டி மாவட்டத்தில் வழங்குவதற்கு இவை உபயோகிக்கப்படும் - சுகாதார அமைச்சர் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தேவையான 120000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) நாட்டை வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் முதற்கட்டமாக ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு இவை உபயோகிக்கப்படவுள்ளன.

கண்டி மாவட்டத்தில் 150000 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதோடு , அம்மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்காக கிடைக்கப் பெற்ற 30000 தடுப்பூசிகள் இரு கட்டங்களாக வழங்கப்பட்டன.

மருந்து இறக்குமதி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வாறு நாட்டுக்கு கிடைக்கப் பெறவுள்ள ஸ்புட்னிக் தடுப்பூசிகளை 3 தினங்களுக்குள் மக்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டதன் பின்னர் கண்டி மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டோரில் 99 சதவீதமானோருக்கு முழுமையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு நிறைவடைந்திருக்கும்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய எதிர்வரும் 4 வருடங்களுக்குள் தேவையான மருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் சுகாதார அமைச்சு வழங்கும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment