உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சட்ட ரீதியான நடவடிக்கைகளை இனவாத, மதவாத திசையில் திருப்ப முயற்சி : பேராயரின் சமூக தொடர்பு மையம் அறிக்கை - News View

Breaking

Thursday, August 26, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சட்ட ரீதியான நடவடிக்கைகளை இனவாத, மதவாத திசையில் திருப்ப முயற்சி : பேராயரின் சமூக தொடர்பு மையம் அறிக்கை

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ரீதியான நடவடிக்கைகளை இனவாத மற்றும் மதவாத திசையில் தள்ளுவதற்கு முற்படுகின்றமை அண்மையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்த கருத்துக்களின் மூலம் தெளிவாகிறது.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பதாக பேராயரின் சமூக தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

போதிய உளவுத் தகவல்கள் பகிரப்பட்டும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்க போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமது பதவிகளையும், உயிர்களையும் பாதுகாத்து தருமாறு அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் உயர் மட்ட பொலிஸ் குழுவொன்று வேண்டுகோளை விடுத்திருந்தது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பேராயரின் சமூக தொடர்பு மையம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான தேசிய கத்தோலிக்க குழுவின் உறுப்பினர் அருட்தந்தை சிறில் பெர்னாண்டோ, பேராயரின் மக்கள் தொடர்பு மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ, களுத்துறை மாவட்ட பிரதான சங்கநாயக பரகடுவே சரணங்கர தேரர் மற்றும் பியகம பௌத்த தேரர் சபையின் பெலிகல அமரசிறி தேரர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களில் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதால் அவர்களை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தவறிழைத்தவர்களாக காண்பிக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை இனவாத மற்றும் மதவாத திசையில் தள்ளுவதற்கு முற்படுகின்றமை இந்த கருத்துக்களின் ஊடாக தெளிவாகிறது. எனவே அந்த கருத்துக்களை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

இவ்வாறான அடிப்படைவாத கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து விலகி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை அரசியல் அழுத்தங்கள் இன்றி நியாயமானதுமாகவும் ஒழுக்கமானதாகவும் முன்னெடுக்குமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment