நாட்டில் கொவிட்19 பரவல் வெகுவாக அதிகரித்து வருவது போல, மலையகத்திலும் தொற்றுகள், மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அட்டன் நகரத்தை முடக்குவதற்கு நகர சபையால் எந்த வகையிலும் முடிவெடுக்க முடியாது. நகரில் உள்ள வர்த்தகர்களே சுயமாக சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என அட்டன் - டிக்கோயா நகர பிதா எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விளக்கம் தருகையில், அட்டன் டிக்கோயா நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 13 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலப் பகுதியில் 43 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
ஓகஸ்ட் 2 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைக்கு அமைய 52 பேரில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 6 பேர் மாத்திரமே நகர சபையைச் சேர்ந்தவர்கள். ஏனைய 16 பேரும் நகர சபையை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இருந்தும் நகர சபையில் உள்ள 22 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக பிழையான தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகர சபையைச் சேர்ந்த 6 பேரும் பொதுப் போக்குவரத்து ஊடாக கடமைக்கு வருபவர்கள்.
எனவே, தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியாது. அதேநேரம் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது அட்டன் நகரத்தை முடக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக என்னிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள்.
உண்மையில் உள்ளூராட்சி மன்றத்தின் தலைவர் என்ற அடிப்படையில் கடைகளை மூடுமாறு என்னால் பணிப்புரை விடுக்க முடியாது. நகரில் உள்ள வர்த்தகர்கள்தான் தகுந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
இருந்தும் நகரில் உள்ள பெரும்பாலான வர்த்தகர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் கடைகளை மூடுவதன் மூலம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்வதாக தெரிவித்து வருகின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல் அன்றாடம் தொழில் செய்துதான் குடும்பங்களை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் உள்ள பலர் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
அட்டன் - டிக்கோயா நகர சபை அரசாங்கத்தின் எண்ணக் கருவோடு பயணிக்க வேண்டிய நிலையில் இருந்தாலும் எமது பிரதேச மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருகின்றோம்.
ஜனாதிபதியின் “கொவிட் செயலணி” எடுக்கின்ற முடிவின் அடிப்படையில் செயற்படுவதே பொருத்தமாக இருக்கும்.
மேலும், நகர மக்களையும் வர்த்தகர்களையும் குழப்பும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த விடயத்தை வைத்து இப்போது அரசியல் செய்யப் பார்ப்பதையும், மக்களை தவறாக வழிநடத்த முனைவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எமது மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ளபடி அனாவசியமாக நகருக்கு வருவதை தவிர்த்துக் கொண்டு சுகாதார நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுய பாதுகாப்பே இன்ற தேவையாகும் என்றார்.
No comments:
Post a Comment