கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது? பல துருவங்களாக பிரிந்து நிற்கும் அமெரிக்க உளவுத்துறை - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது? பல துருவங்களாக பிரிந்து நிற்கும் அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்காவின் உளவு அமைப்புகளால் கொரோனா வைரஸின் தோற்றுவாயை கண்டுபிடிக்க முடியவில்லை. கொரோனா வைரஸ் இயற்கையாகவே தோன்றியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா என அமெரிக்க உளவு அமைப்புகளே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பிரிந்து இருக்கின்றன என செய்திகள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை என, அமெரிக்காவின் 18 உளவு அமைப்புக்களை மேற்பார்வை செய்யும் அலுவலகம் தீர்மானமாக தன் முடிவை குறிப்பிட்டிருக்கிறது.

நிபுணர்களோ, கொரோனா வைரஸின் தோற்றத்துக்கான ஆதாரங்களை சேமிப்பதற்கான காலம் கரைந்து கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறார்கள்.

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரோ அந்த அறிக்கை அறிவியலுக்கு எதிரானது என அதை நிராகரித்துள்ளார்.

தேசிய உளவு அமைப்பு இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வரும் அறிக்கை, அமெரிக்க உளவு முகமைகள் கொரோனா நோய் தொற்றின் தோற்றுவாய் விவகாரத்தில் பிரிந்து கிடப்பதாகக் கூறுகிறது.

"அனைத்து உளவு அமைப்புக்களும் இரு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்கிறார்கள். அதில் ஒன்று இயற்கையாக பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு ஏற்பட்டது, மற்றொன்று ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்கள்."

பல பெயர் குறிப்பிடாத உளவு அமைப்புக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அல்லது அதற்கு முன்னோடி வைரஸிடம் இருந்து தொற்று ஏற்பட்டது என கருதுகின்றன. ஆனால் அவர்களுக்கும் இந்த முடிவில் அதிக நம்பிக்கை இல்லை.

மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்று, வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்களால் ஏற்பட்டிருக்கலாம், அந்த ஆய்வகம்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளவால்களில் இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தது என மற்றொரு உளவு முகமை ஓரளவுக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கைகள் வெளியான பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டார். அதில் சீனா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என விமர்சித்து இருந்தார்.

"கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பதற்கான தகவல்கள் சீனாவில் இருக்கின்றன. ஆனால் ஆரம்பத்திலிருந்தே சீன அதிகாரிகள், சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் உலக பொது சுகாதார சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அத்தகவல்களைப் பெறாமல் தடுக்க வேலை பார்த்தனர்" என பைடன் கூறினார்.

"உலகத்துக்கு விடை வேண்டும், அது கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன்" என கூறியுள்ளார் பைடன்.

கடந்த டிசம்பர் 2019 இல் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுநாள் வரை உலகம் முழுக்க சுமார் 45 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹானுக்குச் சென்று கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா வைரஸ் சந்தையில் விற்கப்பட்ட விலங்கிடம் இருந்து பரவி இருக்கலாம் என கூறியது. அந்த ஆய்வு முடிவுகளை சில விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

கொரோனாவின் தோற்றம் குறித்து ஒரு முடிவுக்கு வர, தரவுகளை மதிப்பீடு செய்து ஓர் அறிக்கையை தயார் செய்யுமாறு, அமெரிக்க உளவு முகமைகளை கடந்த மே மாதம் கேட்டுக் கொண்டார் ஜனாதிபதி பைடன்.

இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் இருக்கும் ஃபோர்ட் டெட்ரிக் பகுதியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தோன்றியது என ஆதாரமற்ற கூற்றுகளைக் கூறியது சீனா.

கூடிய விரைவில், உயிரியல் ரீதியாக கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பதற்கான ஆதாரங்களை சேகரிப்பது சிரமமாகிவிடும் என இந்த வார தொடக்கத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

"இந்த முக்கியமான விசாரணையை நடத்துவதற்கான கால அவகாசம் அதிவேகமாக குறைந்து கொண்டே வருகிறது" எனவும் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment