அணு உலையை மீண்டும் இயக்கும் வட கொரியா : அமெரிக்காவுக்கு புதிய தலைவலி - News View

Breaking

Monday, August 30, 2021

அணு உலையை மீண்டும் இயக்கும் வட கொரியா : அமெரிக்காவுக்கு புதிய தலைவலி

வட கொரிய அரசு அந்த நாட்டில் உள்ள யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலையை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது போல தெரிகிறது என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அணு சக்தி முகமை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் அந்த அணு உலையில் தயாரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. சர்வதேச அணு சக்தி முகமையின் உறுப்பினராக இருந்த வட கொரிய அரசு 2009 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

எனினும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வட கொரிய அணு உலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சென்ற ஜூலை மாதம் முதல் இந்த அணு உலையில் இருந்து குளிர்ந்த நீர் வெளியேற்றப்படுவது இது அந்த அணு உலை இயக்கப்படுவதைக் காட்டுவதாகவும் அணு சக்தி கண்காணிப்பு அமைப்பான ஐ.நாவின் சர்வதேச அணு சக்தி முகமை தெரிவிக்கிறது.

5 மெகாவாட் திறனுடைய உலைகளைக் கொண்டுள்ள யங்பியன் அணு சக்தி வளாகம் வட கொரிய அணு ஆயுத திட்டத்தின் மையமாக உள்ளது.

சிங்கப்பூரில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோர் 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் சந்தித்த பின்பு சில மாதங்களிலேயே இந்த அணு உலை பயன்பாட்டுக்கு வந்தது என்று சர்வதேச அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.

அதற்கு பின்னால் இருந்த இந்த அணு உலையை வல்லுநர்கள் கண்காணித்து வருகிறார்கள். இந்த அணு உலை மூலம் எந்த அளவுக்கு ஆயுதம் தயாரிக்க முடியும் என்பதை அறிவதற்காகவே இவ்வாறு கண்காணிக்கப்படுகிறது.

பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பதப்படுத்தும் அணுக் கதிர்வீச்சு வேதியியல் ஆய்வகம் குறித்தும் சர்வதேச அணு சக்தி முகமை மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது.

இந்த ஆய்வகம் ஏற்கனவே செயல்பாட்டில் இருப்பதாக ஜூன் மாதம் இந்த அமைப்பு தெரிவித்திருந்தது. ஜூலை 2021 வரையிலான ஐந்து மாதங்களுக்கு இந்த ஆய்வகம் செயல்பாட்டில் இருந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.

இந்த அணு உலை மற்றும் ஆய்வகத்தின் மேம்பாடு ஆழமான பிரச்சினைகளை உண்டாக்கக் கூடியது என்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக உள்ளதாகவும் சர்வதேச அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான நெருங்கிய ஒத்துழைப்புடன் தென் கொரிய அரசு வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சர் அந்நாட்டின் யோன்காப் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பாளர்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. 2017ஆம் ஆண்டு வட கொரியா கடைசியாக அணு ஆயுத சோதனை நடத்தியது.
அமெரிக்காவுக்கு தலைவலி
லாரா பிக்கர், பிபிசி செய்தியாளர், தென் கொரியா

டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகியோர் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் மையமாக யங்பியன் அணு உலை வளாகம் இருந்தது.

ஆயுதம் தயாரிக்க தேவையான அளவுக்கு செறிவூட்டப்பட்ட புளூட்டோனியம் உற்பத்திக்கு இந்த 5 மெகாவாட் அணு உலையை முக்கிய ஆதாரமாக உள்ளது. எனினும் இங்குள்ள கருவிகள் பழையதாகி வருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

வட கொரியா மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டால் இந்த அணு உலை கலைக்கப்படும் என்ற கிம்மின் திட்டத்திற்கு டிரம்ப் மறுத்து விட்டார் என்று அப்போது செய்திகள் வெளியாகின.

இரு தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததற்கு இதுவே முக்கிய காரணம் என்று கருதுகிறேன்.

தங்களது அணு ஆயுத கையிருப்பு மேலும் அதிகமாக்கப்படும் என்று ஜனவரி மாதத்தில் கிம் ஜோங் உன் உறுதியளித்திருந்தார்.

போர்க் கருவிகளை சிறியதாகவும் மிகப் பெரிய அளவிலான ஹைட்ரஜன் குண்டை உருவாக்கவும் தங்களது அறிவியலாளர்கள் பணியாற்றுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இந்த திட்டங்களை வட கொரியா தொடங்கியதற்கான எந்த ஓர் அறிகுறியும் இதுவரை தெரியவில்லை.

இதற்கு பதிலாக மோசமடைந்து வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவற்றில் வட கொரிய அரசு கவனம் செலுத்தி வந்தது.

யங்பியன் உலையின் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெளிவான ஒரு முடிவுக்கு வருவது வல்லுநர்களுக்கு கடினமானது. ஆனால் அங்கு மீண்டும் பணிகள் தொடங்கி இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவே தாங்கள் விரும்புவதாக கூறியுள்ள புதிய அமெரிக்க அரசுக்கு இது ஒரு தலைவலியாக இருக்கும். எனினும் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கொள்கை ரீதியாக அமெரிக்கா தற்போது முக்கியத்துவம் வழங்கவில்லை

No comments:

Post a Comment