நண்பரின் வீடு செல்வதாக குளத்தில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

நண்பரின் வீடு செல்வதாக குளத்தில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் பலி

புத்தல, கட்டுகஹகல்கே குளத்தில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக புத்தள பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 19, 20 வயதுக்குட்பட்ட மொணராகலை மஹாநாம தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் மொணராகலை பிரதேசத்தைச் சேர்ந்த கே.பி. கௌஷான் (19), ரந்தில் தாருக (19), தனஞ்சய தேஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூன்று இளைஞர்களும் நேற்றையதினம் (14) காலை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்து, தங்களது வீடுகளிலிருந்து, 2 மோட்டார் சைக்கிளில் பயணித்து குறித்த இடத்திற்கு வந்துள்ளனர்.

இதேவேளை மாலை வரை குறித்த மூவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பாத நிலையில், அவர்களது பெற்றோர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில், இளைஞர்கள் நண்பகல் அளவில் மொணராகலையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருளை பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, புத்தலவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, புத்தல, கட்டுகஹகல்கே குளத்திற்கு அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 3 தலைக்கவசங்கள், பிஸ்கட்கள், மொபைல் போன்கள், ஆடைகள் இருப்பதை அவதானித்த ஒருவர் இன்று (15) முற்பகல் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிரதேசவாசிகளுடன் இணைந்து புத்தல பொலிஸார் குறித்த குளத்தின் வெளிச் செல்லும் வான் கதவின் அடியில் சிக்கியிருந்த நிலையில் சுழியோடிகளின் உதவியுடன் அவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

குறித்த மரணங்கள் தொடர்பான மரண விசாரணைகளை வெல்லவாய மரண விசாரணை அதிகாரி எச்.எம்.ஜே. ஹேரத் மேற்கொண்டதோடு, சடலங்கள் தொடர்பான ஏனைய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் சடலங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த புத்தல பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment